ஒன்றாக வாழ்ந்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் பெண் இன்ஜினியர் தற்கொலை முயற்சி: காதலன் கைது

பூந்தமல்லி: சென்னை நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் சம்பக் (33). போரூர் அருகே உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவரும், அதே நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்யும் சென்னை தி.நகரை சேர்ந்த 33 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள், திருமணம் செய்து கொள்ளாமல், அய்யப்பன்தாங்கல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஒரு வருடமாக கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தனர். சில தினங்களுக்கு முன்பு அந்த பெண் சானிடைசர் மற்றும் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சேர்த்தனர்.

இதுகுறித்து போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். மேலும், போலீசார் மற்றும் பூந்தமல்லி நீதிமன்ற மாஜிஸ்திரேட் அந்த பெண்ணிடம் வாக்குமூலம் வாங்கினர். அதில், சம்பக்கும் நானும் போரூரில் உள்ள  சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும்போது பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து, அய்யப்பன்தாங்கலில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கணவன், மனைவி போல கடந்த ஓர் ஆண்டாக வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில், சம்பக்கிற்கு வேறொரு பெண்ணுடன் அவரது குடும்பத்தினர் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.

இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு சரியான பதில் கூறவில்லை. மேலும், என்னை விட்டுவிட்டு நிச்சயம் செய்த பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்தார். இதனால், எங்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது, அவர் என்னை செத்துப் போ என்று கூறினார். இதனால், விரக்தி அடைந்த நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சானிடைசர் மற்றும் மாத்திரைகளை சாப்பிட்டேன், என்று அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றி, தற்கொலைக்கு தூண்டியதாக சம்பக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: