கிறிஸ்தவர்கள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு பாராட்டு விழா: ஆர்.டி.சேகர் எம்எல்ஏ பங்கேற்பு

பெரம்பூர்: பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் கிறிஸ்தவர்களின் கல்லறைகள் நிரம்பியதால், இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கு பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இதே தொகுதியில் கிறிஸ்தவர்களின் கல்லறைக்கு கூடுதலாக இடம் ஒதுக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அரசுக்கு வலியுறுத்தி வந்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்றதும், இவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, சென்னை மாநகராட்சி ஒப்புதலுடன் கடந்த சில நாட்களுக்கு முன் கொடுங்கையூர் குப்பை கிடங்கில் இந்து-முஸ்லிம்-கிறிஸ்தவர் என 3 மதத்தினரின் கல்லறைக்கு தலா 3 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மூலக்கடையில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் ஜான் ஆலயத்தில் நேற்று முன்தினம் மாலை தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தென்னிந்திய திருச்சபையின் சென்னை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன், ஆலயத்தின் ஆயர் டேவிட் செல்வகுமார், யமுனா ஸ்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி.சேகர், மாமன்ற உறுப்பினர் ஜீவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். கிறிஸ்தவர்களின் 10 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கான பாராட்டு சான்றிதழ் ஆர்.டி.சேகர் எம்எல்ஏவிடம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.

Related Stories: