மின் விளக்குகள் பழுதால் இருளில் மூழ்கிய சுரங்கப்பாதை: சீரமைக்க கோரிக்கை

பல்லாவரம்: பல்லாவரம் சுரங்கப்பாதையில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளதால், இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும், என பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே பாதசாரிகள் ஜிஎஸ்டி சாலையை கடக்க வசதியாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து பல்லாவரம்  ரயில் நிலையம் வருகை தரும் பொதுமக்கள் மற்றும் பல்லாவரம் பஸ்நிலையம், ரயில் நிலையத்தில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் ஜிஎஸ்டி சாலையை கடந்து செல்ல வசதியாக இந்த சுரங்கப்பாதை அமைந்துள்ளது. குறிப்பாக, அருகில் உள்ள மறைமலையடிகள் பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் இந்த சுரங்கப் பாதையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சுரங்கப் பாதையில் மின் விளக்குகள் அனைத்தும் பழுதடைந்துள்ளதால் பகலிலேயே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், வயர்கள் ஆங்காங்கே தாறுமாறாக தொங்கிய நிலையில் அபாயகரமாக காட்சியளிக்கிறது. அவை சுரங்கப் பாதையில் செல்லும் பாதசாரிகளை அச்சுறுத்தி வருகிறது. அதுமட்டுளின்றி, சுரங்கப் பாதையின் தரையில் பதிக்கப்பட்டுள்ள டைல்ஸ்களும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், கவனிக்காமல் செல்லும் முதியோர்கள் மற்றும் நோயாளிகள் கால் தடுமாறி கீழே விழும் சூழ்நிலை உள்ளது. எனவே, பாதசாரிகளின் நலன் கருதி, முக்கியத்துவம் வாய்ந்த இந்த பல்லாவரம் சுரங்கப் பாதையில் சேதமடைந்த மின்விளக்குகள் மற்றும் தாறுமாறாக தொங்கும் மின்வயர்களை சீர்செய்து, போதிய மின்விளக்குகள் அமைக்கவும், உடைந்த டைல்ஸ்களை சரிசெய்யவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதசாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: