வரலாறு தெரியாமல் உளறுகிறார் அண்ணாமலை: அமைச்சர் பொன்முடி ஆவேசம்

அம்பத்தூர்: வரலாறு தெரியாமல் அண்ணாமலை உளறுகிறார், என திமுக முப்பெரும் விழாவில் அமைச்சர் பொன்முடி பேசினார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் வடக்கு பகுதி சார்பில், திமுக முப்பெரும் விழா, அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் தலைமையில் அம்பத்தூர் ஓ.டி பேருந்து நிலையம் அருகில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் க.பொன்முடி, பி.கே.சேகர்பாபு மற்றும் நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது: அண்ணா பிறந்த 15ம் தேதி, திமுக தோற்றுவிக்கப்பட்ட 16ம் தேதி, பெரியார் பிறந்த 17ம் தேதி ஆகிய தேதிகள் திமுக முப்பெரும் விழாவாக கொண்டாப்படுகிறது.

அண்ணாமலை தமிழ்நாட்டில் இருப்பது திராவிட மாடலா அல்லது தமிழ் மாடலா என கேட்கிறார். உங்களுக்கு திராவிடமும் தெரியாது, தமிழும் தெரியாது, நீங்கள் எவ்வாறு ஐபிஎஸ் அதிகாரி ஆனீர்கள் என்றும் தெரியாது. திராவிடம் என்பது இனம், தமிழ் என்பது மொழி, திராவிட இனத்தை சேர்ந்தவர்கள் பேசுகிற மொழியே தமிழ்மொழி. மிகவும் பழமையான மொழி என அனைவருக்கும் தெரியும். அண்ணாமலை எங்கு, எப்போது அழைத்தாலும் நேருக்குநேர் பேச நான் தயார். கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்தவன் நான். பல பேருக்கு நான் பாடம் கற்பித்து இருக்கிறேன். அதேபோல் அண்ணாமலைக்கும் பாடம் கற்பிக்க தயாராக உள்ளேன். அண்ணாமலைக்கு வரலாறு தெரியவில்லை.

அரசியலும் தெரியவில்லை. தமிழக மக்களையும் அவருக்கு தெரியவில்லை. இதுகுறித்து பேச அவருக்கு தகுதியில்லை. முதல்வர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தது மிசாவில் இல்லை என உளறுகிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும், முதல்வர் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது. பாவம் இது அண்ணாமலைக்கு தெரியவில்லை. ஒரு நூற்றாண்டு வரலாறுகூட தெரியாத இவர், தமிழ்நாட்டில் ஒரு கட்சிக்கு தலைவராக உள்ளார். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: