மொபட்டில் இருந்து தவறவிட்ட 5 சவரன், ரூ.5000 போலீசில் ஒப்படைப்பு: வாலிபருக்கு அதிகாரிகள் பாராட்டு

திருவொற்றியூர்: புதுவண்ணாரப்பேட்டை கே.ஜி.கார்டன் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (32). சினிமாவில் உதவி இயக்குனராக வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார். இவர், கடந்த 23ம் தேதி திரைப்படம் தொடர்பாக திருவொற்றியூரில் உள்ள தனது நண்பரை பார்க்க ஆட்டோவில் புறப்பட்டார். புதுவண்ணாரப்பேட்டை அரசு பள்ளி அருகே வந்தபோது, முன்னால் மொபட்டில் சென்ற பெண் ஒருவர், தனது பையை கீழே தவறவிட்டுள்ளார். இதைபார்த்த மூர்த்தி, அந்த பையை எடுத்துகொண்டு தவறவிட்ட பெண்ணின் மொபட்டை பின்தொடர்ந்து செல்லும்படிகூறி சென்றுள்ளார்.

ஆனால் சிறிது நேரத்தில் அந்த பெண் மாயமாகிவிட்டார். பையை திறந்து பார்த்தபோது அதில் 5 சவரன் தங்க நகை, 5 ஆயிரம் ரூபாய், இருசக்கர வாகன ஆர்.சி புத்தகம், ஆதார் கார்டு இருந்துள்ளது. இதையடுத்து மூர்த்தி, அந்த பையை திருவொற்றியூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். திருவொற்றியூர் காலடிப்பேட்டை மேட்டு தெருவை சேர்ந்த பத்மாவதி (40) என்பவரது பை என்பது தெரிந்தது. அவரை வரவழைத்து பையை ஒப்படைத்தனர். மூர்த்தியின் நேர்மையை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Related Stories: