உணவு டெலிவரி வேலை செய்தபடி பிளஸ் 2 படித்த மாணவன் லாரி மோதி பரிதாப பலி : தப்பிய டிரைவருக்கு வலை

பூந்தமல்லி: போரூர் அடுத்த முகலிவாக்கத்தை சேர்ந்தவர் விக்ரம். இவரது மகன் பாலாஜி (18), அதே பகுதி அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். படிப்பு செலவிற்காக தினமும் பள்ளி வகுப்பு முடிந்த பின்பும், விடுமுறை நாட்களிலும் ஆன்லைனில் உணவு டெலிவரி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பாலாஜி உணவு டெலிவரியை முடித்துவிட்டு வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். டிரங்க் - பூந்தமல்லி சாலை, முகலிவாக்கம் அருகே சென்றபோது, பின்னால் கலவை ஏற்றி வந்த லாரி பாலாஜியின் பைக்மீது வேகமாக மோதியது. இதில் நிலைதடுமாறி பாலாஜி கீழே விழுந்துள்ளார். அப்போது, பாலாஜி மீது லாரி ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்து வந்த பாலாஜியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். போரூர் போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து, சடலத்தை மீட்டு பிரேத  பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories: