மினி வேனில் கடத்தி வரப்பட்ட மலேசிய நாணயங்கள் 25 மூட்டை பறிமுதல்: 2 பேரிடம் போலீசார் விசாரணை

சென்னை: சென்னையில் குற்றங்களை தடுக்கும் வகையில், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி, இரவு நேரங்களில் மாநகரம் முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று அதிகாலை எழும்பூர் போலீசார் எழும்பூர் ரவுண்டானா அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், மூட்டை மூட்டையாக மலேசிய நாட்டின் நாணயங்கள் இருந்தது தெரியவந்தது. உடனே மினி வேனில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.  

மேலும், மலேசிய நாணயங்கள் கொண்டு வந்ததற்கான எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை, என தெரியவந்தது. உடனே போலீசார் 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில், வால்டாக்ஸ் சாலையை சேர்ந்த பாபு (35), ஆசிப் (32) என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 25 மூட்டை மலேசிய நாணயங்கள் மற்றும் மினி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், பிடிபட்ட 2 பேரிடம் மலேசிய நாணயங்கள் கள்ளச்சந்தையில் அடிக்கப்பட்டதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: