சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளரிடம் ரூ.3.54 லட்சம் அபராதம் வசூல்: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத்துறையினரால் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டு தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அவ்வாறு சாலைகளில் சுற்றித்திரிந்து மாநகராட்சியால் பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதத் தொகையாக மாடு ஒன்றிற்கு ரூ.1,550 விதிக்கப்படுகிறது. பிடிபட்ட மாடுகளை தொழுவத்திலிருந்து விடுவிக்க அதன் உரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் பிரமாண பத்திரத்தில் மண்டல நல அலுவலர், கால்நடை உதவி மருத்துவர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மாடு வளர்ப்பவர்களின் வீடு அல்லது மாடு பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையொப்பத்தை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களிலும் மண்டல நல அலுவலர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களின் மேற்பார்வையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் கூடுதலாக 10 நபர்கள் நியமித்து காவல் துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரத்துறையின் சார்பில் 14.09.2022 முதல் 20.09.2022 வரை ஆய்வு நடத்தி, சாலையில் சுற்றித் திரிந்த 229 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,550 வீதம் ரூ.3,54,950 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை அவர்களின் சொந்த இடங்களிலேயே கட்டி வைக்க வேண்டும். பொது வெளியில் திரிய விடக் கூடாது. மாடுகளின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றம் செய்யும்போது அந்த இடங்கள் குறித்து முன்கூட்டியே அந்தந்த மண்டல நல அலவலர்களின் அனுமதி பெற வேண்டும். மீறி மாடுகளை பொது வெளியில் விடும் பட்சத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் 1960 பிரிவு 11 (1) உட்பிரிவுகள்படி அபராதம் விதிக்கப்பட்டு, காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டு மாடுகளின் உரிமையாளர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories: