லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் எனக்கூறி அரசு அதிகாரிகளை மிரட்டி ரூ.20 லட்சம் பறிக்க முயற்சி: மர்ம நபருக்கு வலை

அண்ணாநகர்: சென்னையில் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் எனக்கூறிக்கொண்டு, கோயம்பேடு மற்றும் தரமணியில் அரசு அலுவலகங்களில் புகுந்து அதிகாரிகளை மிரட்டி, ரூ.20 லட்சம் பறிக்க முயன்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோயம்பேடு சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜன்பாபு (48). இவர், கோயம்பேட்டில் இயங்கி வரும் சி.எம்.டி.ஏ அலுவலகத்தில் பணிபுரிகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் ஒரு மர்ம நபர் புகுந்து, தன்னை லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் என்று கூறி, சோதனை செய்துள்ளார். மேலும், உங்களிடம் கணக்கில் வராத பணம் அதிகம் உள்ளதாக புகார் வந்துள்ளது. எனவே உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, எனக்கு ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும், என மிரட்டியுள்ளார்.

அதற்கு ராஜன்பாபு, தன்னிடம் அப்படி ஏதும் பணம் இல்லை, எனக்கூறியதால், அந்த நபர் அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர், லஞ்ச ஒழிப்பு துறையில் இதுபற்றி ராஜன்பாபு விசாரித்தபோது, அந்த துறை அதிகாரிகள் யாரும், சோதனை நடத்த வரவில்லை, என தெரிவித்துள்ளனர். அப்போது தான், தனது வீட்டில் சோதனை நடத்தி, பணம் பறிக்க முயன்றது போலி அதிகாரி என தெரியவந்தது. இதுகுறித்து கோயம்பேடு போலீசில் ராஜன்பாபு புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவுசெய்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர். மற்றொரு சம்பவம்:  சைதாப்பேட்டையை சேர்ந்தவர் அசோகன் (56). இவர் தரமணியில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் தலைமை பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர், நேற்று முன்தினம் அலுவலகத்தில் இருந்தபோது, அங்கு வந்த ஒரு மர்மநபர், தன்னை லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் என்று கூறிக்கொண்டு, ‘உங்கள் மீது பல புகார்கள் வந்துள்ளன. அது வெளிவராமல் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் ரூ.10 லட்சம் தரவேண்டும்’ என்று கூறி மிரட்டியுள்ளார். அப்போது, அந்த அலுவலகத்திற்கு திடீரென காவலர்கள் வந்துள்ளனர். எனவே அந்த ஆசாமி, அசோகனிடம் உங்களுடைய புகார் பட்டியலை தயார் செய்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு நைசாக எஸ்கேப் ஆகியுள்ளார். இதுபற்றி அசோகன் லஞ்ச ஒழிப்பு துறையில் விசாரித்தபோது, நாங்கள் எந்த சோதனையும் நடத்த ஆய்வாளரை அனுப்பவில்லை, என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அசோகன் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Related Stories: