மகாளய அமாவாசையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் வாழை இலை விலை உயர்வு: ரூ.500க்கு விற்ற கட்டு ரூ.1200க்கு எகிறியது

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் நான்கு நாட்களுக்கு முன் ரூ.500க்கு விற்பனை செய்யப்பட்ட வாழை இலை கட்டு ஒன்று, மகாளய அமாவாசையை முன்னிட்டு ரூ.1200க்கு விலை எகிறியது. கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு ஆண்டிப்பட்டி, மதுரை, வேலூர், தேனி மற்றும் ஆந்திரா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் கட்டுக்கட்டாக லாரிகளில் வாழை இலைகள் வருகின்றன. பண்டிகை காலங்கள் இல்லாத நாட்களில் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் வாழை இலை, ஒவ்வொரு பண்டிகை சீசனிலும் பல மடங்கு விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், புரட்டாசி மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு வாழை இலை விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஒரு கட்டு வாழை இலை ரூ.1,200க்கும், ஒரு தலைவாழை இலை ரூ.5க்கும் கடந்த இரு நாட்களாக விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், பொதுமக்கள்  கவலை அடைந்தனர். இதுகுறித்து, வாழை இலை வியாபாரி ஒருவர் கூறும்போது, ‘‘கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு கட்டு வாழை இலை ரூ.500க்கும், ஒரு தலை வாழை இலை ரூ.2க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் புரட்டாசி மற்றும் மகாளய  அமாவாசையை முன்னிட்டு, கடந்த இரண்டு நாட்களாக, ஒரு கட்டு வாழை இலை ரூ.1,200க்கும், ஒரு தலைவாழை இலை ரூ.5க்கும்  விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் வாழை இலை வாங்க அதிக ஆர்வம் காட்டியதால் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. இதனால்,  வியாபாரம்  களைகட்டியது. இவ்விலை உயர்வால், வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்’’ என்றார். இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், ‘‘விஷேச நாட்களில் வீட்டில் படையல் போடுவதற்கு, பூஜை செய்வதற்கு வாழை இலை அவசிய தேவையாக உள்ளது. இந்நிலையில், திடீர் விலையேற்றத்தால் கடைகளில் கூடுதல் விலை ெகாடுத்து இலை வாங்க வேண்டியுள்ளது,’’ என்றனர்.

Related Stories: