திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் விழா நாளை தொடக்கம்: இன்று விஸ்வ சேனாதிபதி வீதி உலா

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று விஸ்வசேனாதிபதி வீதி உலா நடைபெறுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக வெங்கடேஸ்வர பெருமாளின் சேனாதிபதியான விஸ்வசேனர் மாடவீதி உலா இன்று நடக்கிறது. அப்போது, ஈசானிய மூலையில் உள்ள புற்றுமண் சேகரிக்கப்பட்டு விஸ்வசேனாதிபதி ஊர்வலத்துடன் கோயிலுக்கு கொண்டு வந்து அங்குரார்ப்பண மண்டபத்தில் 9 பானைகளில் புற்று மண்ணை நிரப்பி நவதானியங்களுடன் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாளை (27ம் தேதி) பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முதல்நாளான நாளை மாலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் பிரமோற்சவ கொடியேற்றம் நடைபெறும்.

அன்று முதல் 9 நாட்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி பல்வேறு வாகனங்களில் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

அதன்படி நாளை இரவு பெரிய சேஷவாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வலம் வருகிறார். 9ம் நாள் (5ம் தேதி) மற்றும் நிறைவு நாளான அன்று காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுகின்றனர். பிரமோற்சவம் சிறப்பாக நடைபெற்று முடிந்த பிறகு அன்று மாலை கோயிலுக்குள் உள்ள தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கருடர் கொடி வேத மந்திரங்கள் முழங்க இறக்கப்பட்டு நிறைவு செய்யப்படுகிறது. ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் நாளை தொடங்க உள்ளதால் கோயில் கோபுரங்கள், சுற்றுப்புற பகுதிகள், மாடவீதிகளில் வண்ணமின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.

Related Stories: