நமீபியா சிவிங்கி புலிகளால் ராஜஸ்தானிலும் அதிசயம் நடக்கும்

ஜெய்ப்பூர்: புதிய சிவிங்கி புலிகளால் ராஜஸ்தான் சுற்றுலாவிலும் பல்வேறு அதிசயங்கள் நிகழும் என்று கூறப்படுகிறது. நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 சிவிங்கிப் புலிகளை, மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி கடந்த 17ம் தேதி திறந்து விட்டார். இவற்றை பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஆர்வம், சுற்றுலா பயணிகளிடம் மேலோங்கி வருகிறது. ஆனால், இந்திய சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள இந்த சிவிங்கி புலிகளுக்கு அவகாசம் தேவைப்படுகிறது. அதனால், இப்போதைக்கு சுற்றுலா பயணிகள் அதை காண அனுமதிக்கப்படவில்லை. இந்த சிவிங்கி புலிகளின் நடமாட்டத்தை சிறப்பு குழு கண்காணித்து வருகிறது. அதில் கிடைக்கும் முடிவுகளை பொருத்து, அவற்றை பார்வையிட பொதுமக்களை  அனுமதிப்பது பற்றி முடிவு செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் விடப்பட்டுள்ள இந்த சிவிங்கி புலிகளால், ராஜஸ்தான் மாநில சுற்றுலாவிலும் புதிய உற்சாகம் பிறக்கும் என கருதப்படுகிறது, ராஜஸ்தானில் உள்ள ரந்தம்பூர் புலிகள் காப்பகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த சிவிங்கி புலிகளின் நடமாட்டம் இருக்கும். ரந்தம்பூரில் இருந்து வெறும் 100 கிமீ தொலைவில்தான் குனோ தேசிய பூங்காவின் நுழைவு வாயிலான கரஹால் உள்ளது. இந்த பூங்கா முழுமையாக திறக்கப்பட்டதும், ராஜஸ்தானில் இவற்றை பார்க்க மக்கள் குவிவார்கள் என கருதப்படுகிறது. இதன்மூலம் இம்மாநில சுற்றுலாத்  துறையின் வளர்ச்சியிலும் பல அதிசயங்கள் நிகழும் என்று கூறப்படுகிறது.

Related Stories: