ஐஸ்வர்யா ராய்க்கு ஆக்‌ஷன் சொன்ன ஆராத்யா

மும்பை: மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பிரபு, ரஹ்மான், பாபு ஆண்டனி, ஜெயராம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம், வரும் 30ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி, இந்தியாவிலுள்ள பல்வேறு நகரங்களுக்கு நேரில் சென்ற படக்குழுவினர், இப்படத்தை ரசிகர்களிடம் விளம்பரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் நடித்தது குறித்து ஐஸ்வர்யா ராய் கூறியதாவது: ஒருநாள் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு எனது மகள் ஆராத்யா வந்தார். இது பீரியட் கதை கொண்ட படம் என்பதால், அங்கு போடப்பட்டு இருந்த செட்டுகள் மற்றும் நான் அணிந்திருந்த உடைகள், அணிகலன்கள் ஆகியவற்றைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டார்.

பிறகு செட்டில் அவர் நடந்து சென்றபோது, அவரது கண்களில் தெரிந்த வியப்பையும், பரவசத்தையும் நான் பெரிதும் ரசித்தேன். இயக்குனர் மணிரத்னம் மீது ஆராத்யாவுக்கு எப்போதுமே அதிக மரியாதையும், அன்பும் உண்டு. அன்று செட்டுக்கு வந்த ஆராத்யா வுக்கு ‘ஆக்‌ஷன்’ என்று சொல்லும் ஒரு அற்புதமான வாய்ப்பை மணிரத்னம் ஏற்படுத்திக் கொடுத்தார். ஆராத்யாவால் அந்த சந்தோஷத்தை அடக்கவே முடியவில்லை. அதைப் பார்த்த நானும், அபிஷேக் பச்சனும் என்ன சொல்வதென்று தெரியாமல் மிகவும் சந்தோஷப்பட்டோம்.

மணிரத்னம் இயக்கத்தில் நானும், அபிஷேக் பச்சனும் சில படங்களில் நடித்துள்ளோம். அப்படிப்பட்ட எங்களில் யாருக்கும் இதுபோல் ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்ததில்லை என்று ஆராத்யாவிடம் சொன்னேன். அதைக்கேட்ட அவர் மிகவும் சந்ேதாஷப்பட்டார். ‘என் வாழ்நாளில் இதுபோன்ற அனுபவத்தை என்னால் மறக்க முடியாது’ என்று ஆராத்யா சொன்னார். உண்மையிலேயே ஆராத்யா ‘ஆக்‌ஷன்’ என்று சொன்ன அந்த தருணத்தை நானும், அபிஷேக் பச்சனும் மறக்க முடியாது. அது ஒரு அபூர்வ தருணம். ஆராத்யா நன்கு வளர்ந்த பிறகு இந்த அனுபவத்தை என்றென்றும் நினைவில் வைத்திருப்பார்.

Related Stories: