அண்ணன் கண் எதிரே சோகம் தற்கொலை செய்வதுபோல் நடித்த பள்ளி மாணவன் பலி: போலீசார் விசாரணை

சென்னை: அண்ணன் கண் எதிரே, தூக்கிட்டு தற்கொலை செய்வதுபோல் நடித்த பள்ளி மாணவன் பரிதாபமாக பலியானார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் சென்னை அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புழல் அருகே புத்தாகரம், காமராஜர் நகரை சேர்ந்தவர் அமுதா. இவருக்கு 3 மகன்கள். இரண்டாவது மகன் கார்த்திக் (11). இச்சிறுவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது தாய் வீட்டில் இல்லாத நேரத்தில், தனது 2 சகோதரர்களுக்கு எதிரே, படுக்கையறையில் கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்வது எப்படி என்பதை கார்த்திக் நடித்து காட்டியுள்ளான்.

இதற்காக, சேரில் ஏறி நின்றபடி, மின்விசிறி கொக்கியில் நைலான் கயிற்றை மாட்டி பின்னர் அதை சுருக்கிட்டு தனது கழுத்தை நுழைத்தபடி கார்த்திக் நடித்து காட்டியிருக்கிறான். அப்போது சேர் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில், கழுத்தில் கயிறு இறுக்கியுள்ளது. இதை பார்த்த மற்ற இருவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். கழுத்து இறுகியதால் சிறிது நேரத்தில் கார்த்திக் துடிதுடித்து அவர்கள் கண் எதிரிலேயே பரிதாபமாக பலியானான். தகவலறிந்த புழல் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து கார்த்திக்கின் சடலத்தை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: