காங்கிரசார் 3 நாள் நடைபயணம்: ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, திக்விஜய், சல்மான் குர்ஷித் பங்கேற்பு

சென்னை: இந்திய அரசியலமைப்பை பாதுகாக்கும் வகையில் காங்கிரசார் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் நடைபயணத்தில் ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, திக்விஜய்  சிங், சல்மான் குர்ஷித் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் எஸ்.சி. துறை,  சிறுபான்மை பிரிவு உள்பட 8 அணிகள் சார்பில் இந்திய அரசியலமைப்பு  பாதுகாப்பு நடைபயணம் 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று  நடந்தது. விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமை தாங்கினர். முன்னாள் தலைவர்கள்  குமரி அனந்தன், திருநாவுக்கரசர், கே.வீ.தங்கபாலு, செல்வப் பெருந்தகை, பொருளாளர் ரூபி மனோகரன், எஸ்.சி. பிரிவு தலைவர்  எம்.பி.ரஞ்சன்குமார், ஊடக துறை தலைவர் கோபண்ணா முன்னிலை  வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள் திக்விஜய்  சிங், சல்மான் குர்ஷித், காங்கிரஸ் முன்னணி அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ‘‘அனைவருக்கும் பாதுகாப்பு, சுதந்திரம், சமத்துவம் வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் சுதந்திர போராட்டத்தின் ஒரே நோக்கம். அதை அரசியலமைப்பு சட்டம் மூலமாக நிறைவேற்றி கொடுத்திருக்கிறோம். இதனை உணர்ந்த ஆர்.எஸ்.எஸ். அரசியல் சட்டத்தை சிதைக்க வேண்டும் என நினைக்கிறார்கள்” என்றார். முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், ‘‘நாடாளுமன்ற மேலவையில் பாஜவுக்கு 3ல் 2 பங்கு பெரும்பான்மை இல்லை. இந்த தடைமட்டும் அகன்றுவிட்டால், நிச்சயமாக அரசியல் சாசனத்தை திருத்துவார்கள், சிதைப்பார்கள், மாற்றி எழுதுவார்கள். இதனை தடுக்க நாடு முழுவதும் உணர்வு வரவேண்டும். அரசியல் சாசனத்தை திருத்தக்கூடாது.

திருத்தவேண்டும் என்றால் அனைத்து மாநிலங்களும், அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய 2 அவைகளிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய திருத்தங்களை செய்யலாம். மிருக பலம், பெரும்பான்மையை வைத்து அரசியல் சாசனத்தை திருத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அனைத்து மாநிலங்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளுகிற சில திருத்தங்களை தவிர வேறு எதையும் திருத்தமாட்டோம் என்று பாஜ சொல்லட்டும், சத்தியம் செய்யட்டும். ஆனால் செய்யமாட்டார்கள். இந்திய அரசியலமைப்பு சீரழிக்கப்படுவதை, சிதைக்கப்படுவதை காப்பாற்றுவோம்” என்றார். நடைபயண தொடக்க விழாவில் காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார், சிரிவெல்ல பிரசாத், ஓபிசி பிரிவு தலைவர் நவீன்குமார், எம்எல்ஏ அசன் மவுலானா, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், நாஞ்சில்  பிரசாத், சிவ ராஜசேகரன், ஆர்.டி.ஐ.பிரிவு மாநில துணை தலைவர் மயிலை தரணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: