12 ஆண்டில் சிக்கிய 5,200 தீவிரவாதிகள்: ஒருவனுக்கு மட்டுமே தண்டனை

கவுகாத்தி: அசாமில் கடந்த 12 ஆண்டுகளில் 5,202 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், ஒரே ஒருவருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 12ம் தேதி நிகழ்ச்சியொன்றில் பேசிய முதல்வர் பிஸ்வா சர்மா, பாஜ தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, 2016ம் ஆண்டில் இருந்து இதுவரை, 1,561 இளைஞர்கள் மட்டுமே தீவிரவாத அமைப்புகளில் சேர்ந்துள்ளதாகவும், 7,935 தீவிரவாதிகள் தேசிய நீரோடையில் இணைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், அம்மாநில காவல்துறை தரவுகளின்படி, அசாமில் கடந்த 2011ம் ஆண்டில் இருந்து, போடோ, கரோ, ரபா, கார்பி, ஆதிவாசி மற்றும் முஸ்லிம்கள் என உல்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த 5,202 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர்களில் லக்கிம்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே 2012ம் ஆண்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்களில் 2,606 பேர் மீது மட்டுமே இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மற்ற வழக்குகளின் விசாரணை நிலுவையில் இருக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. கைதானவர்களில் 2392 பேர் போடோ, 1468 உல்பா, 582 கார்பி, 346 ஆதிவாசி, 178 கரோ, 155 முஸ்லிம், 81 பேர் ரபா சமூகம் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: