பெட்ரோல் குண்டுவீச்சுக்கு பின்னால் பா.ஜ அமைப்புகள் இருக்க வாய்ப்பு: திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை:  பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு பின்னால் பாஜ மற்றும்  இந்து அமைப்புகள் இருக்க வாய்ப்புள்ளது. அதுபற்றி காவல்துறை விசாரிக்க  வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார். விடுதலை  சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வருகிற அக்டோபர் 2ம் தேதி தமிழகம்  முழுவதும் சமூக நல்லிணக்க பேரணி நடத்துவதாக கட்சியின் தலைவர் திருமாவளவன்  அறிவித்திருந்த நிலையில், பேரணி நடைபெறும் இடங்களில் உரிய பாதுகாப்பு  மற்றும் அனுமதி வழங்க கோரி தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவை நேற்று நேரில்  சந்தித்து மனு அளித்தார். பின்னர், நிருபர்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டி:  

தமிழகத்தில்  அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்த நாள் அன்று ஆர்.எஸ்.எஸ் பேரணி  நடத்துவதற்கான தேவை என்ன? மதத்தின் பெயரால், இந்துக்களை பிளவுபடுத்த வேண்டும் என்றுதான்  அக்.2ம் தேதியை தேர்வு செய்துள்ளனர். தமிழகத்தில்  நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு ஏற்கத்தக்கது அல்ல. குற்றவாளிகள்  யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க  வேண்டும். பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பின்னால் பாஜ  மற்றும் இந்து அமைப்புகள் இருக்க வாய்ப்புள்ளது. அதை காவல்துறை விசாரிக்க  வேண்டும்.  

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு அயல்நாட்டில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருந்தால்,  தடை செய்ய கூடிய அதிகாரம் ஒன்றிய அரசுக்கு உள்ளது. ஏன் அவர்கள் இன்றுவரை தடை செய்யவில்லை. ஐஎஸ் அமைப்போடு தொடர்பு இருந்தால் அந்த அமைப்புகளை தடை செய்யலாம். அரசியல் செய்வதற்காக இந்த நாடகத்தை பாஜ ஆடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: