தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் அடைய முயற்சிக்கிறது பாஜ: பாப்புலர் ப்ரண்ட் மாநில தலைவர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் அடைந்திட பாஜ முயல்கிறது என்று பாப்புலர் ப்ரண்ட் மாநில தலைவர் முகமது சேக் அன்சாரி குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் பாப்புலர் ப்ரண்ட் மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி நேற்று அளித்த பேட்டி: ஒன்றிய அரசின் தூண்டுதலின் பேரில் கடந்த சில தினங்களாக பாப்புலர் ப்ரண்ட் அலுவலகங்களில் என்ஐஏ சோதனை நடத்தி நிர்வாகிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதன் பிறகு கோவை, திண்டுக்கல், மதுரை, சேலம் போன்ற பகுதிகளில் பாஜ அலுவலகம் மற்றும் ஆர்எஸ்எஸ்சை சேர்ந்த நபர்களின் அலுவலகம், வாகனம் மீது மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனை சாக்காக வைத்துக் கொண்டு என்ஐஏக்கு எதிராக நடைபெறும் மக்கள் போராட்டங்களை திசை திருப்ப பாஜ திட்டமிட்டு வருகிறது.

பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, பதிலுக்கு நாங்களும் களத்தில் இறங்கினார் நிலைமை மோசமாகும் என எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ளார். இவர்கள் ஒன்றிய அரசின் பெயரைச் சொல்லி தமிழக அரசை மிரட்டி வருகின்றனர். இதற்கு முன்பு பாஜ அலுவலகம், தலைவர்கள் மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகளின் வீடுகளில் நடந்த குண்டுவெடிப்புகள் அனைத்தும் தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும், தங்களை அதிகாரமிக்க நபராக வெளியில் காட்டிக் கொள்ள வேண்டும் என்பது போன்ற அரசியல் லாபங்களுக்கு தங்களுக்கு தாங்களே குண்டுகளை வைத்துக் கொண்டும், வாகனங்களை தீ வைத்துக் கொண்டும், கைகளை வெட்டிக்கொண்டும் சிக்கிக்கொண்ட சம்பவங்கள் ஏராளம் உண்டு. எனவே காவல்துறை இந்த கோணத்திலும் விசாரிக்க வேண்டும்.

பாஜ தலைவர் அண்ணாமலையின் மிரட்டல் தொனியிலான இந்த கூற்று சட்டத்திற்கு விரோதமானது மற்றும் இரு சமூகங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் அடைந்திடும் குறுமதி கொண்டது. இப்படியான வெறுப்பு பேச்சை பேசியுள்ள பாஜ தலைவர் அண்ணாமலையின் கருத்தை பாப்புலர் ப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. தமிழக காவல்துறை அண்ணாமலையின் இந்த அநாகரிக பேச்சிற்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: