ஆன்லைனில் வாங்கிய கடனுக்காக ஊழியர்கள் மிரட்டல் மகனுடன் 60 தூக்க மாத்திரை தின்று லாட்ஜில் மயங்கி கிடந்த தம்பதி: தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

ஓமலூர்: ஓமலூர் அருகே ஆன்லைனில் வாங்கிய கடனை கட்ட முடியாத வாலிபர், ஊழியர்கள் மிரட்டியதால், குடும்பத்துடன் லாட்ஜில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த தின்னப்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(32). இவர் திருச்சியில் உள்ள தனியார் டயர் கம்பெனியில் வேலை செய்துள்ளார். இவருக்கு திவ்யா(27) என்ற மனைவியும், 6 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில் சதீஷ் குமார், தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். அப்போது மொபைல் ஆப்கள் மூலம் ஆன்லைனில் பல லட்சம் கடன் பெற்றுள்ளார். வாங்கிய கடனில் ரூ.15 லட்சம் வரை அடைத்துள்ளார். பல மடங்கு பணம் கட்டிய பிறகும், கடன் கொடுத்த கம்பெனியின் ஊழியர்கள், தினமும் சதீஷ்குமாரை செல்போனில் அழைத்து, இன்னும் பணம் கட்ட வேண்டும் என மிரட்டல் விடுத்து வந்தனர்.

பணம் செலுத்தவில்லை என்றால், உன்னிடம் தொடர்பில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும், உன்னையும், உனது குடும்பதையும் கேவலமாக சித்தரித்து வெளியிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த சதீஷ்குமார், மனைவி மற்றும் மகனை அழைத்துக் கொண்டு ஓமலூர் வந்து, பஸ் நிலையம் அருகேயுள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். 60 தூக்க மாத்திரைகளை வாங்கி, அதை தனது மனைவி மற்றும் மகனுக்கு கொடுத்து விட்டு, அவரும் சாப்பிட்டுள்ளார். மூவரும் அறையிலேயே மயங்கி கிடந்துள்ளனர். இந்நிலையில் வெளியே சென்றவர்களை இரண்டு நாட்களாக காணவில்லை என்று, பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களிலும் தேடியுள்ளனர். அப்போது லாட்ஜில் மயங்கி கிடந்த 3 பேரையும் மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Related Stories: