ராஜஸ்தானில் கெலாட் ஆதரவு எம்எல்ஏ.க்கள் எதிர்ப்பு பைலட்டை முதல்வராக்க கூடாது: சோனியாவுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம்

புதுடெல்லி: ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கு பதிலாக, சச்சின் பைலட்டை முதல்வராக தேர்ந்தெடுக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரை தவிர வேறு யாருக்காவது முதல்வர் பதவியை வழங்கும்படி, கெலாட் ஆதரவு எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடக்கிறது. இதில், சோனியா காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் போட்டியிடவில்லை. இதனால், பல்வேறு மூத்த தலைவர்கள் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றனர். சோனியா  காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் ஆதரவு, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கிடைத்துள்ளது. இதனால், இவர்களின் ஆதரவுடன் தலைவர் தேர்தலில் அவர் போட்டியிட உள்ளார். தவிர, சசி தரூர் உள்ளிட்டோரும் தேர்தலில் போட்டியிட உள்ளனர். கெலாட் இத்தேர்தலில் போட்டியிடுவதால், ராஜஸ்தானின் முதல்வர் பதவியை இளம் தலைவர் சச்சின் பைலட்டுக்கு வழங்கப்படும் என தெரிகிறது.

ஒரு காலத்தில் ராகுலுக்கு இவர் மிகவும் நெருக்கமாக இருந்தார். ஆனால், சில மாதங்களுக்கு முன் அவர் ஆதரவு எம்எல்ஏ.க்களுடன் பாஜவில் சேரப் போவதாக மிரட்டல் விடுத்ததால், சோனியா குடும்பத்தின் நம்பிக்கையை இழந்தார். மேலும், இவரை முதல்வராக்கினால் ராஜஸ்தானில் தனது அரசியல் செல்வாக்கு சரிந்து விடும் என்று கெலாட் நினைக்்கிறார். எனவே, தனது ஆதரவாளர் ஒருவரை முதல்வர் பதவியில் அமர வைக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில், முதல்வர் பதவிக்கான போட்டியில் சச்சின் பைலட் மட்டுமின்றி, ராஜஸ்தான் சட்டப்பேரவை சபாநாயகர் சிபி ஜோஷியின் பெயரும் அடிபடுகிறது. இந்த சூழலில், ெடல்லியில் இருந்து ஜெய்ப்பூர் திரும்பிய சச்சின் பைலட், முதலில் சிபி ஜோஷியை சந்தித்து ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதே நேரம், அமைச்சர் சாந்தி தரிவாலின் வீட்டில் 16 அமைச்சர்கள் உட்பட அசோக் கெலாட் விசுவாசிகள், நேற்று மாலை அடுத்த முதல்வர் யார் என்று ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள முதல்வர் அசோக் கெலாட்டின் தலைமையில் அவரது இல்லத்தில் நேற்றிரவு 7.30 மணியளவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கும் என்றும், இதில் புதிய சட்டப்பேரவை கட்சித் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. அதே நேரம், சச்சினை முதல்வராக்க கூடாது என்றும், வேறு யாராவது ஒருவரை முதல்வராக தேர்வு செய்ய வேண்டும் என்றும் கெலாட் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால், பைலட்டை முதல்வராக தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், நேற்று மாலை திட்டமிட்டப்படி கெலாட் வீட்டில் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில், காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்களாக மல்லிகார்ஜுன கார்கே, அஜய் மாக்கன் பங்கேற்றனர். இதில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான அதிகாரத்தை சோனியாவுக்கு வழங்கி, ஒற்றை வரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, புதிய முதல்வர் யார் என்பதை சோனியா முடிவு செய்ய உள்ளார்.

Related Stories: