புரட்டாசி மாதம், நவராத்திரி பண்டிகை: நெல்லையில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்

நெல்லை: புரட்டாசி மாதத்தில் இன்று சர்வ மஹாளய அமாவாசையும் நாளை நவராத்திரியும் ஆரம்பமாகி சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தசரா பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளதால் நெல்லையில் உள்ள இறைச்சிக் கடைகள் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடியது. வருடத்தின் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வங்களுக்கு உகந்தது என்றும், அந்த மாதங்களில் குறிப்பிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரங்கள் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், இந்துக்களில் பெரும்பாலானோர் அம்மாதத்தில் இறைச்சி உள்ளிட்ட அசைவு உணவுகள் எடுத்துக் கொள்வதில்லை. கடந்த 18ம்தேதி புரட்டாசி மாதம் துவங்கிய நிலையில் புரட்டாசி 8ம் நாளான இன்று (25ம்தேதி) சர்வ மஹாளய அமாவாசையாகும். அதைத் தொடர்ந்து நாளை (26ம்தேதி) முதல் நவராத்திர ஆரம்பமாகிறது. புரட்டாசி 17ம் நாள் (அக்.4) சரஸ்வதி பூஜை, அதற்கடுத்த நாள் (அக்.5ம்தேதி) விஜயதசமி மற்றும் தசரா பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது.

தசராவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலரும் மாலை அணிந்து விரதமிருந்து, காளி உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்துவார்கள். இதனால் புரட்டாசி மாதம் இந்துக்களில் பெரும்பாலானோர் இறைச்சி உள்ளிட்ட அசைவு உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள இறைச்சிக் கடைகள் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.    

Related Stories: