பருவநிலை மாற்றம்,புவி வெப்பமயமாதலால் வளைகுடா கடல் பகுதியை கண்காணிக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

கீழக்கரை: தமிழகத்தின் தென்கிழக்கு கடல் பகுதி மன்னார் வளைகுடா எனப்படுகிறது. ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை மட்டுமின்றி இலங்கை வரையிலும் மன்னார் வளைகுடா பரந்து விரிந்துள்ளது. சுமார் 10 ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி வரை 21 தீவுகள் அமைந்துள்ளன. கீழக்கரை பிரிவில், முன்னி தீவு, வாளை தீவு, தலையார் தீவு, அப்பா தீவு, பூவரசன்பட்டி தீவு, வாலிமுனை தீவு, ஆனைப்பார் தீவு ஆகியவை உள்ளது. பாம்பனில் இருந்து தூத்துக்குடி வரையிலான 140 கி.மீ. தொலைவில் சுற்றியுள்ள 560 சதுர கி.மீ. பகுதியில் அதிகளவில் பவளப்பாறைகள் உள்ளன.

இந்த மன்னார் வளைகுடா பகுதி தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகிலேயே மிகவும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான முள்தோலிகள், சங்கு சிப்பிகள், கணுக்காலிகள், திமிங்கலங்கள், கண்களைக் கவரும் விதத்தில் வண்ண மீன்கள், பாலூட்டி வகையான கடல் பசுக்கள், கடல் அட்டைகள், கடல் பாம்புகள், கடல் குதிரைகள், கடல் பன்றிகள், கடல் ஆமைகள், பவள பாறைகள் என இங்கு மொத்தம் 4 ஆயிரத்து 223 கடல்வாழ் உயிரினங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு வாழ்ந்து வருகின்றது.

மன்னார் வளைகுடாவில் கடல்வாழ் உயிரினங்களின் குறித்து விரிவான ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மற்றும் நபார்டு வங்கி மேற்பார்வையில் ஆய்வை 2019ல் மேற்கொண்டனர். ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் முதல் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை கடலுக்கு அடியில் கணக்கெடுப்பு நடத்தினர்.

ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரையிலான பகுதிகள் 10 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், 62 புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டறியப்பட்டு, அவைகள் அடையாளம் காணப்பட்டு அப்போது பதிவு செய்யப்பட்டது. இதில் 11 கடல் பஞ்சு இனங்கள், 14 கடின பவளப்பாறை இனங்கள், 2 கடல்பாசி இனங்கள், 2 மீன் இனங்கள், 17 மெல்லிய பவளப்பாறை இனங்கள்,16 சங்கு இனங்கள் என 62 புதிதான உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இவை தவிர 50-க்கும் மேற்பட்ட அடையாளம் காண முடியாத புதிய உயிரினங்களும் கண்டறியப்பட்டது.இதில் 39 வடக்கு பகுதியிலும், 11 தெற்குப் பகுதியிலும் காணப்பட்டன.

கடந்த 2003-2005-ல் நடத்தப்பட்ட ஆய்வுத் தகவல்களையும், 2019 ஆய்வுத் தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரியல் வளத்தில் பருவநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட கணகெடுப்பில் 4,223 வகையான கடல்வாழ் தாவரம் மற்றும் விலங்கினங்கள், கடல் பசு, 117 வகை பவளப்பாறைகள், 14 வகை கடல் புற்களும் இருப்பதாகக் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் முதல் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை தாங்கள் கடலுக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்த போது 62 புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், 77 புதிய பவளப்பாறை திட்டுகள் மற்றும் 39 புதிய கடல்புல் திட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் 50க்கும் மேற்பட்ட அடையாளம் காண முடியாத புதிய உயிரினங்களும் கண்டறியப்பட்டது. மேலும் ம‌ன்னார் வளைகுடா கடல் பகுதியில் 2010ம் ஆண்டு முதல் பவள பாறைகளை பாதுகாப்பது மட்டுமல்ல அதை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் கடலோர மீனவ மக்களின் ஆதரவோடு மன்னார் வளைகுடா கடல் உயிர்கோள பகுதி பாதுகாப்பு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு 225 கடலோர கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழுக்களுக்கு சுமார் 5 கோடி ரூபாய் சுழல் நிதியாக வழங்கப்பட்டு மீனவ மக்கள் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன‌.

நாட்டில் முதல் முறையாக பவள பாறைகள் மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் மன்னர் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 6 தீவுகளில் செயற்கை முறையில் பவளப்பாறைகள் வளர்க்கப்பட்டது. சிறப்பாக செயல்படுத்தப்பட்ட‌ மறுசீரமைப்பு திட்டம் வெற்றி பெற்று இப்பகுதி பவள பாறைகளின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க சதவீதத்தை எட்டியுள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். பறவைகள் மற்றும் விலங்குகளை ஆண்டு ஒன்றுக்கு கணக்கெடுப்பு நடத்துவது போல் கடல் வாழ் உயிரினங்களையும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும், காரணம் பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகிய காரணங்களால் கடல் வாழ் உயிரினங்கள் எண்ணிக்கை குறித்து தெரிய வரும். மேலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மன்னார் வளைகுடாவின் அனைத்து கடல் பகுதிகளிளும் கண்காணிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: