பரம்பிக்குளம் அணை ஷட்டர் உடைப்பு எதிரொலி விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றம்: கடலில் கலப்பதால் விவசாயிகள் வேதனை

ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம்- ஆழியார் பாசன திட்டத்தில் (பிஏபி) உள்ள பரம்பிக்குளம் அணை,கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணையின் மொத்த உயரம் 72 அடியாகும். அணையில் சுமார் 17.25 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்த ஆண்டில்தொடர்ந்து பெய்த பருவமழையால், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் பருவமழை துவங்கிய சில வாரங்களிலேயே முழு கொள்ளளவையும் எட்டியதுடன், அணையின் மூன்று மதகுகள் வழியாக அடிக்கடி உபரி நீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 21ம் தேதி அதிகாலையில், மூன்று மதகில் 2வது மெயின் ஷட்டர் உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து திறந்த மதகின் வழியே வினாடிக்கு ஆயிரக்கணக்கான கனஅடி தண்ணீர் வீணாக வெளியேறியது. அதன் பிறகு பொதுப்பணித்துறையினர், அணையின் பாதுகாப்பு கருதி, மற்ற  இரண்டு ஷட்டரையும் திறந்து விட்டு, முதற்கட்டமாக வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீரை வெளியேற்றினர். இதையடுத்து பரம்பிக்குளம் அணை தண்ணீர் செல்லும் ஆற்றங்கரையோர பகுதியான கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பின் அன்று மாலையில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 16,500கன அடியாக குறைக்கப்பட்டது. இருப்பினும், மொத்தமுள்ள 17.25 டிஎம்சி தண்ணீரில், சுமார் 6 டிஎம்சி தண்ணீர் வெளியேற்றப்பட்டால் மட்டுமே, புதிய ஷட்டர் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பரம்பிக்குளம் அணையிலிருந்து மதகுகள் வழியாக உபரியாக தண்ணீர் திறப்பு தொடர்ந்துள்ளது. இதில் நேற்று முன்தினம் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

நேற்றைய நிலவரபடி வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறப்பு இருந்தது.பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரபடி 58 அடியாக குறைந்தது. இருப்பினும், மேலும் 18 அடி தண்ணீர் குறைந்து 40 அடியாக நீர்மட்டம் குறைந்தால் மட்டுமே, ஷட்டருக்கான பணிகள் நடைபெற ஏதுவாக இருக்கும் எனவும், அதுவரையிலும், தொடர்ந்து உபரி நீர் மதகுகள் வழியாக வெளியேறி தண்ணீரின் அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  

திருமூர்த்தி அணைக்கு நீராதாரமாக பரம்பிக்குளம் அணை விளங்குவதால், ஷட்டர் உடைந்து பல டிஎம்சி தண்ணீர் தொடர்ந்து வீணாவது பிஏபி விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பரம்பிக்குளம் அணை ஷட்டர் உடைப்பால், அணையில் மதகு சீரமைப்பு குறித்து ஆராய, சென்னையிலிருந்து நிபுணர்கள் குழுவினர் வந்திருந்தனர். அவர்கள் கடந்த சில நாட்களாக, பரம்பிக்குளம் அணையின் நீர் வழிப்பாதை முழுவதையும் ஆராய்ந்ததுடன்,இன்னும் ஆய்வு பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.அணையிலிருந்து 6 டிஎம்சி தண்ணீரும் வெளியேற்றப்பட்டவுடன், மதகு சீரமைப்பு பணி மற்றும் புதிய ஷட்டர் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

27 அடி உயரம், 40 அடி நீளம் கொண்ட மதகை தரத்துடன் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், அருகே உள்ள மற்ற இரண்டு ஷட்டர்களையும் முழுமையாக சீரமைப்பு பணி நடத்த ஆயத்தமாக உள்ளோம் எனவும், புதிய ஷட்டர் அமைக்க மதிப்பீடு செய்யப்பட்டு போர்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: