மியான்மரில் இருந்து மிசோரமுக்கு கடத்தப்பட்ட ரூ.168 கோடி போதை மாத்திரையுடன் பெண் கைது: அசாம் ரைபிள்ஸ் படை அதிரடி

ஐஸ்வால்: மியான்மரில் இருந்து மிசோரமுக்கு கடத்தப்பட்ட ரூ.168 கோடி போதை மாத்திரையுடன் பெண் ஒருவரை அசாம் ரைபிள்ஸ் படையினர் அதிரடியாக கைது செய்தனர். மிசோரம் மாநிலம் கிழக்கு மிசோரமின் சம்பாய் மாவட்டத்தில் ரூ.167.86 கோடி மதிப்புள்ள 5.05 லட்சம் மெத்தம்பேட்டமைன் போதை மாத்திரைகளை அசாம் ரைபிள்ஸ் படையினர் மீட்டுள்ளனர். இதுகுறித்து பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஏ.எஸ்.வாலியா கூறுகையில், ‘சுமார் 55.8 கிலோ எடையுள்ள போதைப்பொருள் மத்திரைகள் ரகசியமாக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதாக தகவல் கிடைத்தது.

அதையடுத்து மெல்புக் கிராமத்தை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை நடத்தினோம். அப்போது அவ்வழியாக சென்ற வாகனத்தை மடக்கி சோதனை நடத்தியதில், அந்த வாகனத்தில் 50 பெரிய மூட்டைகளில் 5.05 லட்சம் மெத்தம்பேட்டமைன் போதை மாத்திரைகள் இருந்தன. இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் கைது செய்யப்பட்ட பெண்ணையும் சோகாவ்தர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளோம். இந்த போதைப் பொருள் அண்டை நாடான மியான்மரில் இருந்து மிசோரமிற்கு கடத்த திட்டமிருக்க வாய்ப்புள்ளது. அண்டை நாடான மியான்மர் - மிசோரம் இடையே 510 கி.மீ தூரத்திற்கு வேலி இல்லாத எல்லைப் பகுதி என்பதால், இப்பகுதியில் அவ்வப்போது போதைப் கடத்தல் புகார்கள் வருகின்றன’ என்றார்.

Related Stories: