கன்னத்தில் அறைந்ததால் பள்ளி முதல்வர் மீது துப்பாக்கிச் சூடு: உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி

லக்னோ: உத்தபிரதேசத்தில் மாணவரை கன்னத்தில் அறைந்ததால், அந்த மாணவர் பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்டார். அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரில் உள்ள மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் பள்ளிப் படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்புகள் வரை உள்ளன. இந்நிலையில் பள்ளியின் முதல்வர் ராம் சிங் வர்மா என்பவரை, அதேபள்ளியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். முதல்வரின் வயிற்றில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததால், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அபாய கட்டத்தை அவர் தாண்டிவிட்டதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சீதாபூர் காவல் கண்காணிப்பாளர் குலே சுஷில் சந்திரபான் கூறுகையில்,  ‘பள்ளி முதல்வர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவர் தலைமறைவாக உள்ளார். துப்பாக்கி குண்டுகள் உடலின் முக்கிய உறுப்புகளையும் சேதப்படுத்தவில்லை. அதனால் அவரது உயிருக்கு ஆபத்தில்லை. வயிற்றுக்குள் இருந்த துப்பாக்கி குண்டு வெளியேற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மாணவருக்கும், மற்றொரு மாணவருக்கும் ஏற்பட்ட தகராறில் பள்ளி முதல்வர் தலையிட்டு கண்டித்துள்ளார்.

அதன்பின் அவர் தனது அலுவலகத்திற்கு வரவழைத்து இருவரையும் கண்டித்துள்ளார். அப்போது குற்றம்சாட்டப்பட்ட மாணவரின் கன்னத்தில் பள்ளி முதல்வர் சரமாரியாக அறைந்தார். அதன் தொடர்ச்சியாக அடுத்த நாள் பள்ளிக்கு வந்த மாணவர், வளாகத்தில் நின்றிருந்த பள்ளி முதல்வரை மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளான். மூன்றாவது முறையாக துப்பாக்கியால் சுடும் போது, அங்கிருந்தவர்கள் மாணவரை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர் தப்பிவிட்டார். தற்போது மாணவரை தேடி வருகிறோம்’ என்றார்.

Related Stories: