காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பதவி விலகல்?: புதிய முதல்வரை தேர்வு செய்ய இன்றிரவு எம்எல்ஏக்கள் கூட்டம்

ெஜய்ப்பூர்: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுவதால், அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் இன்றிரவு புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக எம்எல்ஏக்களின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட உள்ளதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இதேபோல கேரள எம்பி சசிதரூரும் போட்டியிலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான தேர்தல் விண்ணப்பத்தை அவரது ஆதரவாளர்கள் நேற்று வாங்கிச் சென்றனர். அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறியதை அடுத்து, அம்மாநிலத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. முதல்வர் பதவியையும், கட்சியின் தலைவர் பதவியும் ஒருங்கே கவனிப்பதாக அசோக் கெலாட் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஒருவருக்கு ஒரு பதவிதான் என்று கூறிவருகின்றனர். அதனால் அசோக் கெலாட் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

நிலைமை இவ்வாறு இருக்க, அசோக் கெலாட்டின் அரசியல் எதிரியான சச்சின் பைலட், நேற்று முன்தினம் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அசோக் கெலாட் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பட்சத்தில், மாநில முதல்வர் பதவியை சச்சின் பைலட்டிடம் ஒப்படைக்கலாம் என்ற கருத்து மூத்த தலைவர்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதற்கேற்றால் போல் சச்சின் பைலட்டை நேற்று 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். மேலும் அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் சிலரும் சச்சின் பைலட்டை சந்தித்ததால், நிச்சயம் அசோக் கெலாட் முதல்வர் பதவியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். அதே சமயம் முதல்வர் பதவிக்கான போட்டியாளர்கள் வரிசையில் சச்சின் பைலட் மட்டுமின்றி சட்டப் பேரவை சபாநாயகர் சிபி ஜோஷியின் பெயரும் அடிபடுகிறது.

அதனால் ெடல்லியில் இருந்து ஜெய்ப்பூர் திரும்பிய சச்சின் பைலட், முதலில் சிபி ஜோஷியை சந்தித்தார். இருவரும் சுமார் ஒன்றரை மணிநேரம் ஆலோசனை நடத்தினர். ஆனால், இந்தக் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பது தெரியவில்லை. ‘விப்ரா’ நல வாரிய தலைவர் மகேஷ் சர்மாவும் சச்சின் பைலட்டை சந்தித்தார். அதன்பின் மகேஷ் சர்மா கூறுகையில், ‘ராஜஸ்தான் மாநில முதல்வராக சச்சின் பைலட்டை ேதர்வு செய்ய வேண்டும். அவரை தவிர வேறு யாருக்கும் வாய்ப்பு கொடுக்க கூடாது. ராஜஸ்தானில் பாஜகவின் செயல்பாட்டை முடக்கவும், காங்கிரசின் வளர்ச்சிக்கும் சச்சின் பைலட்டின் தேர்வு சரியாக இருக்கும்’ என்றார். இதேபோல் அமைச்சர்கள் ராஜேந்திர சிங் குதா, கோவிந்த் ராம் மேக்வால் போன்ற அசோக் கெலாட் ஆதரவாளர்களும் சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்தாண்டு ராஜஸ்தானில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், பாஜகவின் செயல்பாட்டை கட்டுப்படுத்தவும் மாநில முதல்வராக யாரை நியமிக்கலாம்? என்று காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய ெபாதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் முதல்வர் அசோக் கெலாட்டின் இல்லத்தில்  இன்றிரவு 7 மணியளவில் சட்டமன்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கிறது. இந்த  கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான மாநில பார்வையாளர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, அஜய்  மாக்கன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த ஆலோசனை கூட்டத்தின் நோக்கம் என்ன என்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மறுபுறம் காங்கிரஸ்  தலைவர் பதவியை காட்டிலும், ராஜஸ்தானின் அடுத்த புதிய முதல்வர் யார்? என்ற சஸ்பென்ஸ் நீடிப்பதால் ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சசி தரூர் 30ம் தேதி வேட்புமனு தாக்கல்: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுவது உறுதியான நிலையில், அக்கட்சியின் திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் வரும் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக நேற்று டெல்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் சசிதரூரின் பிரதிநிதிகள் வேட்பு மனுவை வாங்கிச் சென்றனர். அசோக் கெலாட்டுக்கு எதிராக சசிதரூர் களம் இறங்கியுள்ளதால், அவர் தனக்கு ஆதரவாக நாடு முழுவதும் வாக்காளர்களிடம் (வேட்பாளரை பரிந்துரைக்கும் பிரதிநிதிகள்) கையெழுத்து சேகரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: