மண்டைக்காடு அருகே நள்ளிரவில் தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

குளச்சல்: தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பி.எப்.ஐ. அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே கடந்த இரு நாட்களாக பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை தாம்பரம், மதுரை உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்துள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள கருமன்கூடல் பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (55). தொழிலதிபர். இவர் பாரதிய ஜனதா முன்னாள் ஆதரவாளர். நேற்று நள்ளிரவில் இவரது வீட்டின் அருகில் பைக்கில் இரு மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் பெட்ரோல் நிரப்பிய 2 பாட்டில்களில் தீயை பற்ற வைத்து கல்யாணசுந்தரத்தின் வீட்டின் மீது வீசிவிட்டு தப்பினர். இதில் வீட்டின் முன் பகுதியில் நின்ற கார் சேதம் அடைந்தது. வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்து முன் பகுதியில் கிடந்த சோபா மற்றும் சைக்கிளும் சேதம் அடைந்தன. இன்று அதிகாலை வீட்டில் இருந்தவர்கள் எழுந்து வந்து பார்த்தபோது தான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரிய வந்தது.மண்டைக்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். தடயவியல் நிபுணர்களும் வந்து வீட்டின் முன் சிதறி கிடந்த பாட்டில் துண்டுகள் உள்ளிட்ட சில தடயங்களை போலீசார் சேகரித்தனர்.

கேமரா செயலிழக்க வைப்பு: கல்யாணசுந்தரத்தின் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஜாமர் கருவி மூலம் செயல் இழக்க வைக்கப்பட்டுள்ளன. அவரது வீட்டில் உள்ள கேமராக்கள் மட்டுமின்றி, அருகில் உள்ள வீடுகளில் உள்ள கேமராக்களும் செயல் இழந்துள்ளன. கல்யாணசுந்தரத்தின் வீட்டில் இருந்த ஒரே ஒரு கேமரா மட்டும் செயல் இழக்கவில்லை. அதில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பான காட்சிகள் பதிவாகியுள்ளது. நேற்று பகல் 11 மணியளவில் கார் ஒன்று கல்யாணசுந்தரத்தின் வீட்டின் அருகில் வந்து நோட்டமிட்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

Related Stories: