கேரளாவில் காங்கிரஸ் மாஜி அமைச்சர் மரணம்: ராகுல் காந்தி அஞ்சலி

திருவனந்தபுரம்: கேரளாவில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஆரியாடன் முகம்மது (87) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். கேரளாவில் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஆரியாடன் முகமது. ஏ.கே.அந்தோணி, உம்மன்சாண்டி ஆகியோரது அமைச்சரவைகளில் தொழில், வருவாய் மற்றும் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தார். 1980ல் தன்னுடைய ஆதரவாளர்களுடன் இடது முன்னணியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வனம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 2001 மற்றும் 2005ல் உம்மன்சாண்டி மந்திரி சபையில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தார். 1977ல் முதன் முதலாக இவர் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். அடுத்த தேர்தலில் இவர் தோல்வியடைந்த போதிலும், 1987 முதல் 2011 வரை போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்றார்.

இந்தநிலையில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வாரம் ஆரியாடன் முகம்மது கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், இன்று காலை காலமானார். இவரது உடல் அடக்கம் நாளை காலை 9 மணியளவில் நிலம்பூர் முக்கட்டா பகுதியில் உள்ள பள்ளிவாசலில் நடைபெறுகிறது. ஆரியாடன் முகம்மதின் மரணத்துக்கு ராகுல் காந்தி, கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான், முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி உள்ளிட்ேடார் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, திருச்சூர் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி இன்று காலை 10 மணிக்கு வடக்காஞ்சேரியில் பயணத்தை நிறைவு செய்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நிலம்பூருக்கு சென்று ஆரியாடன் முகம்மதின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதன்பின் நிலம்பூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு வடக்காஞ்சேரி சென்றார். இதன்பிறகு மாலையில் திட்டமிட்டபடி அங்கிருந்து ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொள்கிறார்.

Related Stories: