முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு மொழியால் இணைந்தவர்களை சாதி, மதத்தால் பிரிக்க முடியாது

சென்னை: மொழிக்கு மட்டும் தான் அன்பால் இணைக்கக்கூடிய ஆற்றல் உண்டு. மொழியால் இணைந்தவர்களை சாதி, மதத்தால் பிரிக்க முடியாது என்று தமிழ்ப் பரப்புரைக் கழகம் தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற தமிழ்ப் பரப்புரைக் கழகத்தில் பேசியதாவது: தமிழர்கள் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகமாகவும் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் வாழ்கிறார்கள். சில நாடுகளில் தமிழ் எழுதவும் பேசவும் படிக்கவும் மறந்த தமிழர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தமிழைச் சொல்லிக் கொடுப்பதற்காகத்தான் தமிழ்ப் பரப்புரைக் கழகம் தொடங்கப்பட்டுள்ளது. 24 மொழிகளில் தமிழ்ப் பாட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

30 நாடுகள் 20 மாநிலங்களைச் சேர்ந்த தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் இணையவழியாக இணைந்து இந்த விழாவில் பங்கேற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. உணர்வால் உள்ளத்தால் தமிழால் நாம் அனைவரும் இணைந்துள்ளோம். அமெரிக்கா, குவைத், ஓமன், நார்வே போன்ற நாடுகளைச் சேர்ந்த நம் உறவுகளும் இணைந்துள்ளார்கள். மொழிக்கு மட்டும் தான் இத்தகைய அன்பால் இணைக்கக்கூடிய ஆற்றல் உண்டு. மொழியால் இணைந்தவர்களை சாதியால், மதத்தால் பிரிக்க முடியாது.

தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சார்பில் அயலக வாழ் தமிழ் மாணவர்களுக்கு அடிப்படைநிலை முதல் பட்டக்கல்வி நிலை வரை தமிழ்க்கல்வி இணையவழியாக அளிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள தொடர்பு மையங்கள் மூலம் இந்த இணையவழி தமிழ்க் கல்வித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 28 தொடர்பு மையங்கள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டன. ஆனால், கடந்த ஓராண்டில் மட்டும் 17 புதிய தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களின் பங்கேற்பை உறுதிசெய்ய கணித்தமிழ் பேரவைகள் 200 கல்லூரிகளில் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்கு ரூ.5 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விருப்பங்களோடு தமிழைக் கற்கலாம், படங்களைக் கொண்டு தமிழைக் கற்கலாம் ‘ஆடியோ புக்ஸ்’ வழங்க இருக்கிறோம். சந்தேகங்கள் எழும்போது ‘வீடியோ பாடம்’  பார்த்து தெளியலாம். ‘பால்ஸ் கார்ட்ஸ்’ மூலம் அதிக சொற்களைக் கற்கலாம். இதன் மூலம் தமிழ் கற்றல் என்பது ஒரு பாடமாக இல்லாமல் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். 24 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இந்தப் புத்தகம். 12 மொழிகளில் ஒலிப் புத்தகமாகவும் கிடைக்கிறது. எல்-எஸ்-ஆர்-டபிள்யூ என்ற திறன்கள் அடிப்படையில் இவை அமைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, ஐந்தாம் நிலை வரையிலான பாடப்புத்தகங்கள்  தயாரிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளன.

இதன் மூலமாக தமிழில் பேசலாம், படிக்கலாம் என்பது எளிமையாக்கப்படும். பிரிக்கும் பண்பாடு அல்ல நம்முடையது, பிணைக்கும் பண்பாடுதான் தமிழ்ப் பண்பாடு, அத்தகைய பண்பாட்டைக் கொண்ட பழந்தமிழ் இலக்கியங்களை அனைவரும் அறிய தமிழைப் படிக்க வேண்டும். தேவாரம் உள்ளிட்ட பாடல்களை இசைக் கோவைகளாக வழங்க இருக்கிறோம். முதல்நிலை முதல் பருவத்திற்கான  பாடநூல்கள் 26 நாடுகள், 20 மாநிலங்களில் உள்ள தமிழ்ப் பள்ளிகள், தொடர்பு மையங்கள், தமிழ் ஆர்வலர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

தொடங்கப்பட்டுள்ள தமிழ்ப் பரப்புரைக் கழகத்தின் மூலமாக, 22 நாடுகள் மற்றும் 20 மாநிலங்களைச் சேர்ந்த 25 ஆயிரம் மாணவர்கள் முதற்கட்டமாகப் பயனடைய இருக்கிறார்கள். இதனை, மேலும் உலகு தழுவி வாழக்கூடிய பல ஆயிரக்கணக்கான அயலகத் தமிழ் மாணவர்களுக்குக் கொண்டு செல்லும் பணியை தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலமாகத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும். தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவின் கனவை - செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்த முத்தமிழறிஞர் கலைஞர் கனவை  நிறைவேறும் நாளாக இது அமைந்துள்ளது. தொண்டு செய்வாய் தமிழுக்கு, துறை தோறும் துறை தோறும் துடித்தெழுந்தே என்று வலியுறுத்தி நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related Stories: