கோயம்பேட்டில் அரசு அதிகாரியை மிரட்டி லஞ்ச ஒழிப்பு சோதனை போலி அதிகாரிக்கு வலை

சென்னை: சென்னை கோயம்பேடு சிவன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜன்பாபு (48). இவர், கோயம்பேட்டில் சிஎம்டிஏ அலுவலகத்தில் செயற்பொறியாளராக உள்ளார். இவரது சி.எம்.டி.ஏ அலுவலகத்துக்கு நேற்று ஒரு மர்மநபர் வந்தார். அங்கிருந்த ராஜன்பாபுவின் உதவியாளர் பிரேமாவிடம், ராஜன்பாபு எங்கே.. அவரை பார்க்க வேண்டும் என்று மிரட்டும் தொனியில் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் அதிகாரி, ‘நீங்கள் யார்?’ என கேட்டபோது, ‘நான் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்’ என கூறியுள்ளார். மேலும், பிரேமாவின் செல்போன் மூலம் வாட்ஸ் அப்பில் ராஜன்பாபுவை மர்மநபர் தொடர்பு கொண்டார். தன்னை லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் என்று கூறிக்கொண்டு, உங்களை உடனே பார்க்கவேண்டும். உங்கள் அலுவலகத்தில் உள்ளேன். சீக்கிரம் அலுவலகத்துக்கு வாருங்கள் என கூறி போனை துண்டித்து விட்டார்.  

இதைக்கேட்டு பயந்து போன அதிகாரி ராஜன்பாபு, வேலை விஷயமாக வண்டலூர் சென்றதை பாதியிலேயே விட்டுவிட்டு மறுபடியும் தனது அலுவலகத்துக்கு அவசர அவசரமாக திரும்பி வந்தார். அப்போது அந்த மர்மநபர், உங்கள் மீது நிறைய புகார்கள் வந்துள்ளது. வீட்டையும் சோதனை செய்ய வேண்டும். உங்கள் வீட்டு அருகே எங்க குழுவினர் உள்ளனர் என தெரிவித்ததால் அவரை அரசு காரில் கோயம்பேட்டில் உள்ள தனது வீட்டிற்கு ராஜன்பாபு அழைத்து சென்றார்.

ஆனால், சிறிதுநேரத்தில் சோதனையை முடித்துவிட்டு, மீண்டும் அவரது காரிலேயே அலுவலகத்தில் வந்து இறங்கி அவசர அவசரமாக தப்பிச்சென்றுள்ளார் அந்த மர்மநபர். பின்னர், அந்த நபர் குறித்து விசாரித்தபோது போலி லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் என தெரிய வந்ததால் ராஜன்பாபு கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோயம்பேடு போலீசில் ராஜன்பாபு புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் என கூறி ஏமாற்றிய நபர் யார் என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரிக்கின்றனர்.

Related Stories: