சென்னையில் கடந்த 9 மாதங்களில் 333 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை: சென்னையில் குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கவும், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் 23ம் தேதி வரை சென்னையில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 191 குற்றவாளிகள், கொள்ளை, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 83 குற்றவாளிகள், கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை செய்த 45 குற்றவாளிகள், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 6 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 5 குற்றவாளிகள், உணவு பொருள் கடத்தலில் ஒரு குற்றவாளி என மொத்தம் 333 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் குற்ற வழக்குகள் உள்ள நபர்கள், நன்னடத்தை பிணை பத்திரங்கள் எழுதி கொடுத்து மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக தி.நகர், புனித தோமையார் மலை, வண்ணாரப்பேட்டை, அடையாறு, திருவல்லிக்கேணி காவல் நிலையங்களில் இருந்து 7 குற்றவாளிகள் பிணையில் வரமுடியாத வகையில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த தகவல் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: