தமிழகத்தில் கொள்கை ரீதியாக திராவிட மாடல் ஆட்சி செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்

பெரம்பூர்: தமிழகத்தில் கொள்கை ரீதியாக திராவிட மாடல் ஆட்சியை செய்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் எ.வ.வேலு புகழாரம் சூட்டினார். சென்னை கிழக்கு மாவட்டம், வில்லிவாக்கம் கிழக்கு பகுதி திமுக சார்பில் திமுக முப்பெரும் விழா, திராவிடர் திருவிழா நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை அயன்புரம் ஜாயிண்ட் ஆபீஸ் அருகே நடந்தது. வில்லிவாக்கம் கிழக்கு பகுதி செயலாளர் வாசு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து  சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்பி தயாநிதி மாறன், செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் எம்எல்ஏ வெற்றிஅழகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் தற்போது திராவிடர் ஆட்சி நடந்து வருகிறது. பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய மூவரையும் கொள்கை ரீதியாக வலுவாக பிடித்துதான் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது திராவிட மாடல் ஆட்சியை செய்து வருகிறார்’’ என்றார்.

பின்னர் தயாநிதி மாறன் எம்பி பேசியதாவது: திமுக என்கின்ற கட்சி உருவாகி 73 ஆண்டுகள் ஆகிவிட்டது. 73 ஆண்டுகள் ஆகியும் மொழி திணிப்பை எதிர்த்து கொண்டே இருக்கிறோம். திமுககாரர்கள் என்றால் பொன்னாடை போர்த்திக்கொள்வது என்கின்ற கலாச்சாரம் உண்டு. அது சாதாரண கலாச்சாரம் அல்ல, பெரியாரால் கொண்டுவரப்பட்ட கலாச்சாரம். அந்த காலத்தில் கிராமப்புறங்களில் பொன்னாடைகளை அணிந்தவர்கள் ஆதிக்க சாதினர். அவர்களை பார்க்கிற கீழ் சாதியினர் துண்டுகளை கட்டி இருந்தாலும் பார்த்தவுடன் இடுப்பில் கட்ட வேண்டும். இல்லையென்றால், துண்டை கக்கத்தில் கட்ட வேண்டும். இவ்வாறான உயர்வு தாழ்வு மனப்பான்மை இருந்தது. அதனை சரி செய்வதற்காக தந்தை பெரியார் அனைவருக்கும் பொன்னாடையை அணிவித்து சிறப்பு செய்தார். அதை நாம் இதுவரை பின்பற்றி வருகிறோம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. அனைவரும் சமமாக நினைப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பகுதி திமுக நிர்வாகிகள்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: