சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஜுலன் கோஸ்வாமி ஓய்வு

லண்டன்: இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி, சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்து அணியுடன் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியுடன் அவரது 20 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. சென்னையில் 2002, ஜனவரி 6ம் தேதி இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் அறிமுகமான ஜுலன் கோஸ்வாமி (39 வயது), இந்திய அணிக்காக 12 டெஸ்ட் போட்டியில் 44 விக்கெட் (சிறப்பு 25/5) மற்றும் 291 ரன், 204 ஒருநாள் போட்டியில் 255 விக்கெட் (சிறப்பு 6/31) மற்றும் 1228 ரன், 68 சர்வதேச டி20ல் 56 விக்கெட் (சிறப்பு 5/11) மற்றும் 405 ரன் எடுத்துள்ளார்.

மகளிர் ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற மகத்தான சாதனையுடன் ஓய்வு பெற்றுள்ள கோஸ்வாமிக்கு முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் உள்பட கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதல் 2 ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 2-0 என முன்னிலை பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றிய இந்திய அணி வீராங்கனைகள் அந்த வெற்றியை கோஸ்வாமிக்கு அர்ப்பணித்தது குறிப்பிடத்தக்கது. 3வது போட்டியில் நேற்று டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசிய நிலையில், இந்தியா 45.4 ஓவரில் 169 ரன்னுக்கு சுருண்டது. ஸ்மிரிதி மந்தனா 50, தீப்தி ஷர்மா 68*, பூஜா வஸ்த்ராகர் 22 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர் (5 பேர் டக் அவுட்). அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 17 ஓவரில் 65 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறிய நிலையில், கேப்டன் அமி ஜோன்ஸ் - சார்லி டீன் ஜோடி 8வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடி ரன் சேர்த்தது.

Related Stories: