துலீப் கோப்பை பைனல் தோல்வியின் பிடியில் தெற்கு: மேற்கு மண்டலம் அபார பந்துவீச்சு

கோவை: மேற்கு மண்டல அணியுடனான துலீப் கோப்பை இறுதிப் போட்டியில், 529 ரன் என்ற இமாலய இலக்கை துரத்தும் தெற்கு மண்டலம் 154 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. கோவையில் நடைபெற்று வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் மேற்கு மண்டலம் 270 ரன்னில் சுருண்ட நிலையில், தெற்கு மண்டலம் 327 ரன் குவித்தது. 57 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய மேற்கு மண்டலம், 4 விக்கெட்  இழப்புக்கு 585 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 265 ரன், ஷ்ரேயாஸ் 71, சர்பராஸ் கான் 127*, ஹெட் படேல் 51* ரன் விளாசினர். தென் மண்டல தரப்பில் சாய்கிஷோர், கிருஷ்ணப்பா தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து 529 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென் மண்டலம் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியது. ஒரு முனையில் ரோகன் குன்னும்மால் உறுதியுடன் போராட... மயாங்க் அகர் வால் 14, கேப்டன் ஹனுமா விகாரி 1,  பாபா இந்தரஜித் 4,  மணிஷ் பாண்டே 13, ரிக்கி புயி 13 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குன்னும்மால் 93 ரன் (100 பந்து, 14 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி முலானி பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.

4ம் நாள் ஆட்ட முடிவில் தெற்கு மண்டலம்  6 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்துள்ளது. கை வசம் 4 விக்கெட் மட்டுமே இருக்க, வெற்றிக்கு இன்னும் 375 ரன் தேவை என்ற இக்கட்டான நிலையில் அந்த அணி இன்று கடைசி நாள் சவாலை எதிர்கொள்கிறது. சாய் கிஷோர் 1, ரவி தேஜா 8 ரன்னுடன் களத்தில் உள்ளனர். மேற்கு பந்துவீச்சில் உனத்கட், அதித் ஷேத், ஷாம்ஸ் முலானி தலா 2 விக்கெட் கைப்பற்றி அசத்தினர். போட்டியை டிரா செய்தாலே, முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் தென் மண்டலம் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு இருந்தது. மேற்கு மண்டலம் அபாரமாகப் பந்துவீசி வெற்றியை தன் பக்கம் திருப்பிக் கொண்டுள்ளது.

Related Stories: