12 மாத மகப்பேறு விடுப்பு உள்பட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கி பெண்களை ஊக்குவிக்கிறது: ஐகோர்ட் கிளை பாராட்டு

மதுரை: தமிழக அரசு 12 மாத மகப்பேறு விடுப்பு வழங்குவது போன்ற சலுகைகளை வழங்கி பணியாற்றும் பெண்களை ஊக்குவிக்கிறது என்று ஐகோர்ட் கிளை நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். மதுரையைச் சேர்ந்தவர் கண்மணி. இவர் தனக்கு வழங்கப்பட்ட பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் அரசின் மதுரைக்கிளை அச்சகத்தில் பணியாற்றி வந்த நிலையில் அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற அச்சகத்தில் பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. 2016ல் திருமணம் நடந்துள்ளது. கடந்த 2020 பிப்ரவரி மாதம் மதுரைக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 8 மாதத்திற்குள்ளாக மீண்டும் சென்னைக்கு இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதை எதிர்த்து மனுதாரர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

அரசு தரப்பில் குறிப்பிடும்போது மனுதாரர் பணியாற்றிய சமயத்தில் மதுரை அரசு அச்சகத்தில் முறைகேடு நடந்ததாகவும்,  ரூ.1.20 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பான துறைரீதியான நடவடிக்கையாகவே, இடம் மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான முறையான விசாரணை நடைபெற்று வருவதால், விசாரணைக்கு பின்பே, இதில் உரிய முடிவெடுக்க இயலும். பல ஆண்டுகளாக பெண்களின் பங்களிப்பை நாம் பயன்படுத்தவில்லை. குடும்பம், குழந்தைகள் என அனைவரையும் கவனித்துக் கொள்ள வேண்டிய சூழல் இருப்பதால் படித்த பெண்கள் கூட தங்கள்  வேலைவாய்ப்பை கைவிடும் சூழல் உள்ளது. சமீபத்திய உலகம் பெண்கள் முக்கியத்துறைக்கு வருவதற்கும், அதில் தங்களை நிரூபிப்பதற்கும் வாய்ப்புகளை வழங்குகிறது. தமிழக அரசு 12 மாத மகப்பேறு விடுப்பு வழங்குவது போன்ற சலுகைகளை வழங்கி பணியாற்றும் பெண்களை ஊக்குவிக்கிறது. பெண்களின் சேவைகள் எந்த தடையுமின்றி மாநிலத்தின் நலனுக்காக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனக்கூறி, வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories: