பாஜ அலுவலகம், பிரமுகர் வீடுகளில் தாக்குதல் உள்துறை செயலாளர், டிஜிபியிடம் பாஜ நேரில் மனு

சென்னை: பாஜ அலுவலகம், பாஜ பிரமுகர்கள் வீடுகளில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு சம்பவம் போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக பாஜ தலைவர் கே.அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தை அக்கட்சியின் துணை தலைவர்கள் கரு.நாகராஜன், திருப்பதி நாராயணன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், மாவட்ட தலைவர் காளிதாஸ், பொதுச்செயலாளர் சி.ராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் பணிந்திர ரெட்டியிடம் வழங்கினர். இதேபோன்று டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடமும் அளித்தனர்.

தொடர்ந்து கரு.நாகராஜன் அளித்த பேட்டியில், ‘பாஜ அலுவலகம், நிர்வாகிகள் வீடு, பாஜ ஆதரவான ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்படுகின்றன. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தில் போலீஸ் டி.ஜி.பி. தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜ அலுவலகம், நிர்வாகிகள் இல்லம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அலுவலகம், நிர்வாகிகள் இல்லங்களுக்கும் தக்க பாதுகாப்பு வழங்க அளிக்க வேண்டும். நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சொல்லி இருக்கிறார். பாஜ அலுவலகம், நிர்வாகிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என்பதையும் அவர் உறுதி செய்திருக்கிறார்’என்றார்.

Related Stories: