ஏழுமலையானுக்கு சொந்தமான 960 சொத்துக்களின் விவரம் இணையதளத்தில் வெளியீடு: மொத்த மதிப்பு ரூ.85,705 கோடி

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ரூ.85,705 கோடி மதிப்புள்ள 960 சொத்துக்களுடன் கூடிய வெள்ளை அறிக்கை இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நேற்று அதன் தலைவர் சுப்பா தலைமையில் நடைபெற்றது. அப்போது, அவர் பேசியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நாடு முழுவதும் மற்றும் இதர நாடுகளிலும் மொத்தம் 85 ஆயிரத்து 705 கோடி மதிப்புள்ள 960 சொத்துக்கள் உள்ளன.

இது குறித்த வெள்ளை அறிக்கை இன்று (நேற்று) அறங்காவலர் குழுவில் வெளியிடப்பட்டு பக்தர்கள் காணும் விதமாக தேவஸ்தான இணையத்திலும்  பதிவியேற்றம் செய்யப்பட்டுள்ளது. 1984ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை 116 சொத்துக்கள் பல்வேறு அரசு ஆட்சியில் இருந்தபோது பல்வேறு காரணங்களுக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளது. அவற்றையும் சேர்த்தால் தேவஸ்தானத்திற்கு 1,169 சொத்துக்கள் இருந்தது. கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு தேவஸ்தானத்திற்கு சொந்தமான எந்த ஒரு சொத்துக்களும் விற்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டது. அதை  கடைபிடித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தேவஸ்தான ஊழியர்களுக்கு430 ஏக்கரில் வீட்டுமனை: சுப்பா மேலும் கூறுகையில், ‘திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வீட்டுமனை வழங்க, அரசிடம் ரூ.60 கோடி கொடுத்து 300 ஏக்கர் நிலம் வாங்கபட்டுள்ளது. மேலும், வருங்கால பயன்பாட்டுக்காக மேலும் 130 ஏக்கர் நிலம் ரூ.25 கோடியில் வாங்கப்பட உள்ளது. இதன் மூலம், 430 ஏக்கர் நிலம் தேவஸ்தானம் வாங்க உள்ளது,’ என தெரிவித்தார்.

* இங்கிலாந்து, ஐரோப்பாவில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்

உலகம் முழுவதும் இந்து தர்ம பிரசாரத்தை மேம்படுத்தும் ஒரு பகுதியாக, அக்டோபர் 15 முதல் நவம்பர் 13 வரை இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடத்தப்பட உள்ளது. இதற்கான அழைப்பிதழை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா நேற்று வெளியிட்டார். அதன்படி, அக்டோபர் 15, 16 மற்றும் 22ம் தேதிகளில் இங்கிலாந்தில் உள்ள பேசிங் ஸ்டோக், மான்செஸ்டர், வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்டிலும்,  23ம் தேதி அயர்லாந்தின் டப்ளினிலும் திருக்கல்யாணம் நடைபெறும்.

Related Stories: