பூடானில் சுற்றுலாவுக்கு அனுமதி இந்தியர்களுக்கு ரூ.1200 கட்டணம்: 2 ஆண்டுகளுக்கு பிறகு மகிழ்ச்சி

கவுகாத்தி: கொரோ னா தொற்றினால் மூடப்பட்ட இந்திய -பூடான் எல்லை இரண்டரை ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, இரண்டரை ஆண்டுகளுக்கு முன் பூடான் எல்லை மூடப்பட்டது. இதனால், சர்வதேச சுற்றுலாவுக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால், செப்டம்பர் 23ம் தேதி எல்லையை திறப்பதாக பூடான் அரசு சமீபத்தில் அறிவித்தது. மேலும், சுற்றுலா துறைக்கான சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக நிலையான மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்தது. அதன்படி, நேற்று முன்தினம் இந்திய- பூடான் இடையிலான 4 சர்வதேச எல்லைகள் திறக்கப்பட்டன. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இவை திறக்கப்பட்டு இருக்கும். இந்திய சுற்றுலா பயணிகள் பூடானில் தங்கியிருக்க விரும்பினால் ஒரு நாளைக்கு ரூ.1200 கட்டணம் செலுத்த வேண்டும். இதர நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இது, 200 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் இருந்து செல்வோர் வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அல்லது வேறு ஏதாவது அடையாள அட்டையை காட்டினால் போதும்.

Related Stories: