தாம்பரம் அருகே பரபரப்பு ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: பைக்கில் வந்த மர்ம நபர்கள் அட்டூழியம்; தனிப்படை அமைத்து போலீஸ் வலை

சென்னை: சென்னை அடுத்த தாம்பரம் அருகே ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில், பைக்கில் வந்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், ராஜராஜேஸ்வரி தெருவை சேர்ந்தவர் சீதாராமன் (63). இவர் ஆர்எஸ்எஸ் தாம்பரம் பகுதி சங்கசாலக் மாவட்ட தலைவராக உள்ளார். வீட்டில் இவரது மனைவி, 2 மகள்கள், மகளின் குழந்தை என 5 பேர் இருந்துள்ளனர். ஆர்எஸ்எஸ் சார்பில் தினமும் காலை நடைபெறும் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டங்களில் இவர் பங்கு பெறுவது வழக்கம்.

அந்த வகையில், நேற்று காலையும், கூட்டத்துக்கு செல்வதற்காக அதிகாலை 3:30 மணிக்கு கிளம்பிவீட்டில் இருந்து வெளியே வர முயன்றுள்ளார். இந்நிலையில் சரியாக 3:55 மணி அளவில் அவரது வீட்டின் வெளியே பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து, அவர் உடனடியாக வீட்டிற்கு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, இவரது வீட்டின் கார் பார்க்கிங் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் உடனடியாக சீத்தாராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் தண்ணியை ஊற்றி தீயை அனைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

சம்பவம் குறித்து சிட்லபாக்கம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின்பேரில் அங்கு வந்த போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.அதில், இருசக்கர வாகனத்தில் 2 மர்ம நபர்கள் வந்து சீதாராமன் வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு கையில் தயாராக வைத்திருந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை பற்ற வைத்து வீட்டினுள் வீசி விட்டு தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து, பள்ளிக்கரனை காவல் துணை ஆணையர் ஜோஸ் தங்கையா சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். இது தொடர்பாக சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசியமர்ம நபர்களை தேடி வருகின்றனர். அதிகாலையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: