புதிய கள்ளக் காதலுக்கு எதிர்ப்பு வீட்டிற்கு அழைத்து மது விருந்து வைத்து முதல் கள்ளக்காதலனை கொன்ற காதலி கைது: 2வது கள்ளக்காதலனும் சிக்கினான்

சென்னை: 2வது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், புதிய கள்ளக்காதலனுடன் சேர்ந்து, முதல் காதலனை கொலை செய்த கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர். சென்னை விருகம்பாக்கம் வெங்கடேசன் நகர் சாரதாம்பாள் தெருவில் வசிப்பவர் சவுந்தர்யா(32). இவர் சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் நாகராஜ். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து தனியாக வசித்து வந்தனர்.

இந்தநிலையில் சவுந்தர்யாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விஜி(27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் சவுந்தர்யாவின் வீட்டில் விஜி வசித்து வந்தார். இவரும் கடந்த சில மாதங்களாக குடித்து விட்டு வந்து சண்டை போட்டு வந்துள்ளார். மேலும் சவுந்தர்யாவின் இரு மகன்களையும் கொடுமைப் படுத்தி வந்ததாகவும், தினமும் அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் தனது பிரச்னையை தன்னுடன் வேலை பார்க்கும் பிரபு(27) என்பவரிடம் தெரிவித்து வந்துள்ளார். அவர் ஆறுதல் கூறி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் விஜிக்கு தெரிந்ததால் சவுந்தர்யா, பிரபு இருவரையும் கண்டித்துள்ளார். மேலும் பிரபுவுக்கு போன் செய்து, கொலை செய்வேன் என்று மிரட்டியதோடு, வாட்ஸ் அப்பிலும் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

இது குறித்து பிரபு, கள்ளக்காதலி சவுந்தர்யாவிடம் புகார் செய்துள்ளார். இதனால் இருவரும் சேர்ந்து, விஜியை கொலை செய்வது என்று முடிவு செய்தனர். திட்டமிட்டபடி வீட்டில் இருந்த விஜிக்கு மது விருந்து கொடுத்துள்ளனர். அவர் அதிகமாக மது அருந்தியதும், அவரை அடித்தும், கத்தியால் குத்தியும் வீட்டில் வைத்தே கொலை செய்துள்ளனர். பின்னர், எதுவும் தெரியாததுபோல சவுந்தர்யா வேலைக்குச் சென்று விட்டார்.  சவுந்தர்யா மகன்கள் பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் சென்று வீட்டில் தனியாக இருந்த விஜியை யாரோ கொலை செய்து விட்டனர் என்று கூறினர். இது குறித்து தகவல் தெரிந்த போலீசார் விஜியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், சவுந்தர்யா மீது சந்தேகம் எழுந்ததால், அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தனது 2வது கள்ளக்காதலனுடன் சேர்ந்து, முதல் கள்ளக்காதலனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனால் சவுந்தர்யா, பிரபு ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories: