உறுப்புதான விழிப்புணர்வில் தமிழகம் முன்னிலை 99 இதயம், 113 நுரையீரல் நோயாளிகளுக்கு பொருத்தி சாதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: உறுப்பு தான விழிப்புணர்விலும், தானம் பெற்ற உறுப்புகளை பயன்படுத்துவதிலும் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் 4ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் உறுப்பு மாற்றுதின நிகழ்ச்சி மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், செயலாளர் செந்தில்குமார், சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் உமா, மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு மற்றும் அனைத்து அரசு மருத்துவ கல்லூரி முதல்வர்கள் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 1.40 கோடி குடும்பங்கள் பயனாளிகளாக உள்ளனர். 2008ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் மூளைச் சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டது. 2022 மே முதல் தற்போது வரை 67 உறுப்பு கொடையாளர்களின் 224 உறுப்புகள், நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது. 2008 அக்டோபர் முதல் தற்போது வரை 1,559 உறுப்பு கொடையாளர்கள் மூலம், 5,687 உறுப்புகளும், 3,629 திசுக்களும் தானமாக பெறப்பட்டது. முதல்வர் தலைமையிலான இந்த அரசு பெறுப்பேற்ற முதல் தற்போது வரை 148 உறுப்பு கொடையாளர்களிடம் இருந்து 606 முக்கிய உறுப்புகளும், 307 திசுக்களும் தானமாக பெறப்பட்டுள்ளது.

அதில், 99 இதயம், 113 நுரையீரல், 135 ஈரல், 255 சிறுநீரகம், 2 கணையம் மற்றும் 2 கைகள் கொடையாக பெறப்பட்டுள்ளது. 2022 ஏப்ரல் 22 முதல் தற்போது வரை 29 உறுப்பு கொடையாளர்களிடம் இருந்து 49 உறுப்புகளும் 38 திசுக்களும் தானமாக பெறப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 590 பயனாளிகள் ரூ.86.35 கோடி செலவில் பயனடைந்துள்ளனர். உறுப்பு தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை அளிப்பதிலும், உறுப்பு தான விழிப்புணர்விலும் மற்றும் தானம் பெற்ற உறுப்புகளை பயன்படுத்துவதிலும் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக உள்ளது என்றார்.

Related Stories: