×

தமிழகத்தை தொடர்ந்து புதுவையில் 10 பேருக்கு இன்புளுயன்சா வைரஸ் தொற்று: 529 குழந்தைகள் காய்ச்சலால் பாதிப்பு

புதுச்சேரி: தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சலால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் 529 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக வைரஸ் காய்ச்சல் (ஃப்ளு) வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனை தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சிறப்பு காய்ச்சல் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் குழந்தைகள், பெரியவர் என அனைவருக்கும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி, காரைக்காலில் நேற்று 529 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு வந்து சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் ராமுலு கூறியிருப்பதாவது: ராஜீவ்காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 430, இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 53, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 46 என மொத்தம் 529 குழந்தைகள் காய்ச்சால் பாதிக்கப்பட்டு வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வந்து சிகிச்சை பெற்றனர்.இதில் ராஜீவ்காந்தி குழந்தைகள் மருத்துவமனை - 43, இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி -7, காரைக்கால் அரசு பொது மருத்துவமனை -6 என 56 குழந்தைகள் அதிக காய்ச்சால் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.தற்போது ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் 142, இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 42, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 17 என 201 குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள உள்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் என 110 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் புதிதாக 8 பேருக்கு இன்புளுயன்சா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்புளுயன்சா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10
அதிகரித்துள்ளது.

இதில் ஜிப்மரில் 2 பேரும், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் ஒருவர், காரைக்கால் பொது மருத்துவமனையில் ஒருவர், தனியார் மருத்துவமனைகளில் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவற்றில் குழந்தைகள் யாரும் இல்லை. அனைரும் பெரியவர்களே ஆவார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : New Tamil Nadu , In Puduvai, 10 people are affected by influenza virus, children are affected by fever
× RELATED தென்காசி அருகே புதிய தமிழகம்...