×

அக்.2ல் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி; கம்பு, லத்தி, ஆயுதங்கள் கொண்டு செல்ல தடை: நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: அக்.2-ல் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்துள்ளதையடுத்து, காயம் ஏற்படுத்தகூடிய கம்பு, லத்தி போன்ற ஆயுதங்களை கொண்டு செல்ல கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்திய சுதந்திர தின 75ம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தில் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் அக்.2ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்படுகிறது.

இந்த ஊர்வலத்திற்கு செப்.28ம் தேதிக்குள் சமந்தப்பட்ட காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டுமென உயர்நீதிமன்ம் உத்தரவிட்டது. மேலும், அணிவகுப்பு ஊர்வலத்திற்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் ஊர்லத்திற்கு வழங்கியுள்ள நிபந்தனைகள் வருமாறு: அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்கும் எவரும் எந்தவொரு தனிநபர், எந்த சாதி, மதம் போன்றவற்றைப் பற்றி தவறாகப் பேசக்கூடாது.

எக்காரணம் கொண்டும் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு தொடர்பாக எதையும் பேசவோ அல்லது கருத்தை வெளிப்படுத்தவோ கூடாது. காயத்தை ஏற்படுத்தக்கூடிய கம்பு, லத்தி அல்லது ஆயுதம் எதையும் கொண்டு செல்லக்கூடாது. காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வழிகாட்டுதலின்படி குடிநீர், முதலுதவி, ஆம்புலன்ஸ், நடமாடும் கழிப்பறை, கண்காணிப்பு கேமராக்கள், தீயணைக்கும் கருவிகள் போன்றவற்றுக்கு தேவையான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்ய வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட பாதையில் இடதுபுறமாக மட்டுமே அணிவகுப்பை தொடர வேண்டும். வழியில் நிறுத்தவோ அல்லது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தவோ கூடாது. சாலையின் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே அணிவகுப்பிற்கு பயன்படுத்த வேண்டும். போக்குவரத்து மற்றும் அணிவகுப்பை ஒழுங்குபடுத்துவதற்கு காவல்துறைக்கு உதவ போதுமான தன்னார்வலர்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வைத்திருக்க வேண்டும். காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே அணிவகுப்பு செல்வதை உறுதிசெய்வது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்பாகும்.

பெட்டி வகையிலான ஒலிபெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது. அணிவகுப்பில் ஈடுபடுவோர் மதம், மொழி, கலாச்சாரம் மற்றும் பிற அமைப்பினரின் உணர்வுகளை எந்த வகையிலும் புண்படுத்தக் கூடாது. பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதத்திற்கான செலவை திருப்பிச் செலுத்துவதற்கான உறுதிமொழி மற்றும் இழப்பீடு அல்லது மாற்றுச் செலவுகளை ஏற்கும் உறுதிமொழி அளிக்க வேண்டும். நீதிமன்றத்தின் இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் தேவையான நடவடிக்கைகளை சுதந்திரமாக எடுக்கலாம். இவ்வாறு நிபந்தனை அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Allowance for RSS procession, Ban on carry of wheat, lathis, weapons, court
× RELATED தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை...