6 திருமணம் செய்த கல்யாண ராணி உள்பட 4 பேர் சிறையிலடைப்பு: மேலும் 4 பேரை பிடிக்க தீவிரம்

நாமக்கல்: 6 திருமணம் செய்த கல்யாண ராணி உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 4 பேரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்கரை அருகேயுள்ள கள்ளிபாளையத்தை சேர்ந்தவர் தனபால் (35). இவருக்கும், மதுரை சந்தியாவுக்கும் (26) கடந்த 7ம் தேதி புதுவெங்கரை அம்மன் கோயிலில் திருமணம் நடந்தது. பெண் வீட்டின் சார்பில் அவரது அக்கா, மாமா எனக்கூறி இருவரும், மதுரையை சேர்ந்த புரோக்கர் பாலமுருகனும் (45) மட்டுமே பங்கேற்றனர்.

திருமணம் முடிந்ததும் புரோக்கர் பாலமுருகன், கமிஷன் தொகையாக ₹1.50 லட்சத்தை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். கடந்த 9ம் தேதி சந்தியா மாயமானார். அவரது செல்போனும், உறவினர்களாக வந்தவர்கள் மற்றும் புரோக்கரின் செல் போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து தனபால் பரமத்திவேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனிடையே அதேபகுதியை சேர்ந்த ஒருநபருக்கு திருமணம் செய்ய மணமகளை தேடியபோது, வேறு ஒரு புரோக்கர் மூலம் சந்தியாவின் போட்டோ வந்துள்ளது.

இதையறிந்த தனபால் மற்றும் உறவினர்கள், சந்தியாவையும் புரோக்கரையும் பிடிக்க திட்டம் தீட்டி, சந்தியாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து, மதுரையை சேர்ந்த பெண் புரோக்கர் தனலட்சுமி (45) என்பவரிடம் பேசி, மணமகனின் போட்டோவை கொடுத்தனர். அவர், மணமகளுக்கு மாப்பிள்ளையை பிடித்து விட்டது எனக்கூறியதால், போன் மூலமே பேசி திருமணத்தையும் முடிவு செய்தனர். பின்னர் நேற்று முன்தினம் காலை, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திருமணம் செய்வதாக முடிவு செய்து காலை 6 மணிக்கு சந்தியா, தனலட்சுமி, கெளதம், ஜெயவேல் ஆகியோர் காரில் வந்தனர்.

அப்போது அங்கிருந்த தனபால் மற்றும் உறவினர்கள், சந்தியா, தனலட்சுமி மற்றும் அவர்களுடன் வந்தவர்களை பிடித்து பரமத்திவேலூர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், மதுரையை சேர்ந்த இந்த கும்பல், இதுவரை சந்தியாவுக்கு தனபாலையும் சேர்த்து 6 பேரை திருமணம் செய்து வைத்துள்ளனர். ஏழாவதாக மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சந்தியாவை திருமணம் செய்து வைக்க இருந்தபோது, வசமாக சிக்கிக் கொண்டது தெரிந்தது. ஒவ்வொரு திருமணத்தின் போதும், சந்தியா லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு, 2 நாள் மட்டும் மாப்பிள்ளையுடன் நெருங்கிப் பழகுவார். இரவில் கணவன் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும்போது, தனது நகை, பணம் மற்றும் துணிகளை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விடுவார். இந்த நெட்வொர்க்கிற்கு மூளையாக பாலமுருகனும், தனலட்சுமியும் செயல் பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

மதுரையை சேர்ந்த பெண் புரோக்கரான தனலட்சுமி, சந்தியாவை போல் இன்னும் 3, 4 பெண்களை வைத்து, கடந்த 2 வருடங்களுக்கு மேலாக இந்த கல்யாண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர்கள் காங்கேயம், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மாதம் ஒருமுறை இதுபோன்று மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் சந்தியா மட்டுமே, கடந்த ஒன்றரை வருடத்தில் 6 பேரை திருமணம் செய்து கைவரிசை காட்டியுள்ளார். சந்தியாவுக்கு ஒரு மகன், மகள் உள்ளதாக கூறப்படுகிறது. சந்தியாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தன்னை மிரட்டி இதில் ஈடுபடுத்தியதாக தெரிவித்துள்ளார். இந்த கும்பல், பணப்புழக்கம் அதிகம் உள்ள குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களிடம் மட்டுமே, தொடர்ச்சியாக கைவரிசை காட்டி வந்துள்ள தகவலும் தெரியவந்துள்ளது.

இதனிடையே பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் விசாரணை நடத்தி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சோழவந்தான்பேட்டையை சேர்ந்த சந்தியா(26), மேலவாசல் வீட்டுவசதி வாரிய பகுதியை சேர்ந்த தரகர் தனலட்சுமி (45), வில்லாபுரம் அம்மாச்சியார் கோயில் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் கெளதம் (26), வாடிப்பட்டி மேல்நாச்சியாபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் ஜெயவேல் (30) ஆகிய 4 பேரையும் கைது செய்தார். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 4 பேரையும் போலீசார் சேலம் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள திண்டுக்கல் மாவட்டம், தாதன்குளத்தை சேர்ந்த தரகர் பாலமுருகன் (45), விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேட்டமலை பகுதியை சேர்ந்த ரத்தினம் மகன் அய்யப்பன் (28), புரோக்கர்களான ரோஷினி, மாரிமுத்து ஆகிய 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: