கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பாராக மாறிய திறந்தவெளி பொதுமக்கள் கடும் அச்சம்

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் உள்ள சாலையில் பொதுவழியில் நின்று குடிமகன்கள் மது அருந்துவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட் ஏ ரோடு பகுதியில் இயங்கிவரும் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் வாங்கி சென்று திறந்தவெளியில் மது அருந்துகின்றனர். பின்னர் போதை ஏறியதும் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு நடுரோட்டில் தாக்கிக் கொள்கின்றனர். பெரும்பாலானவர்கள் குடிபோதையில் சாலையிலேயே அலங்கோலமாக படுத்து கிடக்கின்றனர்.

இதனால் அவ்வழியாக வருகின்ற பெண்கள், அச்சப்படுகின்றனர். மேலும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொருட்கள் வாங்க வரும் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து கோயம்பேடு காவல்நிலையத்தில் பெண்கள் உள்பட பலர் புகார் தெரிவித்துவிட்டனர். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. தொடர்ந்து மதுபோதையில் சாலையில் அட்டகாசம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது;

கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளில் திறந்தவெளியில் மது, உணவு பொருட்களை விற்பனை செய்கின்றனர். திறந்தவெளியில் பாரை திறந்துவைத்து வியாபாரம் செய்வதால் குடிமகன்கள் நடுரோட்டில் மது அருந்தி விட்டு அங்கேயே மது பாட்டில்களை உடைத்து போடுகின்றனர். நடுரோட்டில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொள்கின்றனர்.

இதுபற்றி டாஸ்மாக் கடைக்கு சென்று கேட்டால் அவர்களை மிரட்டுகின்றனர். எங்கு வேண்டுமானாலும் போய் புகார் கொடு என்று பார் உரிமையாளர்கள் எச்சரிக்கின்றனர். எனவே திறந்தவெளியில் மதுபாட்டில்கள், பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். போலீசார் தீவிரமாக கண்காணித்து திறந்தவெளியில் மது அருந்துவதை தடுத்து நிறுத்தவேண்டும். இவ்வாறு கூறினர்.

Related Stories: