நன்னடத்தை அடிப்படையில் இன்று புழல் சிறையில் இருந்து 12 கைதிகள் விடுதலை

புழல்: அண்ணாவின் 113வது பிறந்த நாளை முன்னிட்டு, நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 700 கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்தின் அனைத்து மத்திய சிறைகளில் தண்டனை பெற்ற கைதிகளில் தகுதியானவர்களை அடையாளம் காணும் விதிகள் வகுக்கப்பட்டன.

இதில், 10 ஆண்டு சிறையில் உள்ளவர்களில், நன்னடத்தையுடன் கூடிய கைதிகளை விடுதலை செய்யவும், பாலியல் துன்புறுத்தல், பயங்கரவாத குற்றங்கள், கடத்தல் போன்ற பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் விடுதலை பெற தகுதியற்றவர்கள் என பிரித்து, முன்கூட்டியே விடுதலை செய்வதற்கானவர்கள் பட்டியல் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 9 மத்திய சிறைகளில் தேர்வான கைதிகள் படிப்படியாக விடுதலை செய்யப்படுகின்றனர். இதன் ஒரு பகுதியாக, புழல் மத்திய சிறையில் இன்று காலை 12 கைதிகள் முன்கூட்டி விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு மளிகை தொகுப்பு பொருட்கள், வேலை பார்த்த ஊதியத்தை சிறை அதிகாரிகள் வழங்கி அனுப்பி வைத்தனர். மேலும் பரிந்துரை செய்யப்பட்ட பிற கைதிகள் இன்னும் சில நாட்களில் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என புழல் சிறைத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: