ஈரோடு அருகே பா.ஜ. பிரமுகரின் கார் எரிப்பு

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி எஸ்.ஆர்.டி. நகர் பகுதியை சேர்ந்தவர் சிவசேகர் (48). பா.ஜ. கட்சியின் முன்னாள் நகர பொருளாளர். இவர் புஞ்சைபுளியம்பட்டியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அவருக்கு சொந்தமான மூன்று கார்களை தனது வீட்டின் முன்புறம் நிறுத்துவது வழக்கம். நேற்று இரவு 10 மணிக்கு ஒரு காரை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிவதை கண்டு சிவசேகர் அதிர்ச்சி அடைந்தார். இதைத் தொடர்ந்து உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீப்பிடித்து எரிந்த காரை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காருக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என விசாரணை செய்து வருகின்றனர். தற்போது அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் தீ வைத்த நபர்கள் குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஏற்கனவே கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், புஞ்சை புளியம்பட்டியில் பா.ஜ. பிரமுகரின் கார் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கல்வீச்சு

திருப்பூர் ஜெய்நகரில் வசித்து வருபவர் பிரபு. இவர் ஆர்எஸ்எஸ் மாநில பொறுப்பாளரில் ஒருவராக உள்ளார். தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று இவரது வீடு என்று நினைத்து இவரது பக்கத்து வீட்டின் ஜன்னல் கண்ணாடி, கார் கண்ணாடிகளை மர்ம நபர்கள் கற்கள் வீசி உடைத்துள்ளனர்.

Related Stories: