திண்டுக்கல்லில் பாஜ நிர்வாகியின் கார் ஷெட்டுக்கு தீ வைப்பு: மர்மநபர்களுக்கு வலை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பாஜ பிரமுகரின் கார் மற்றும் டூவீலர்களுக்கு தீ வைத்து விட்டு தப்பிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல்லில் உள்ள குடைபாறைபட்டியை சேர்ந்தவர் செந்தில் பால்ராஜ். திண்டுக்கல் மேற்கு மாநகர பாரதீய ஜனதா கட்சி தலைவர். இவர், பழைய டூவீலர்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். வீட்டின் அருகே ஷெட் அமைத்து, அதில் விற்பனைக்கு வந்த டூவீலர்களை நிறுத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், செட்டுக்குள் சென்றனர். பின்னர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பால்ராஜுக்கு சொந்தமான கார் மற்றும் டூ வீலர்களுக்கு தீ வைத்து விட்டு தப்பியோடினர். இதில் கார் மற்றும் டூவீலர்களில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. தொடர்ந்து காற்றின் வேகத்தில் தீ வேகமாக பரவி எரிய ஆரம்பித்தது. இந்நிலையில் வீட்டிற்குள் புகை பரவியதால் திடுக்கிட்டு எழுந்த பால்ராஜ், இது குறித்து திண்டுக்கல் தீயணைப்பு துறையி னருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் ஒரு கார் மற்றும் 5 டூவீலர்கள் எரிந்து நாசமானது. சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  பாஸ்கரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இது தொடர்பாக வழக்குப்பதிந்த திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய போலீசார், வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு தப்பியோடிய மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: