8 மாணவிகளுக்கு தொல்லை 16 வயது சிறுவன் கைது: பள்ளி விழிப்புணர்வில் பயன்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி பகுதியில் 8 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவனை காரமடை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதியை சேர்ந்த 10 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

பள்ளியில் பாலியல் தொல்லை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது இந்த மாணவி தங்கள் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரிடம் தெரிவித்தார். மேலும் கொரோனா காலத்தில் வீட்டிற்கு வந்து தொடர் தொல்லை கொடுத்ததாகவும் கூறினார். மாணவி கூறியதையடுத்து மேலும் 7 மாணவிகள் அதே நபர் தங்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று ஆசிரியரிடம் தெரிவித்தனர்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் இது குறித்து காரமடை போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது 8 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேட்டுப்பாளையத்தில் 16 வயது சிறுவன் 8 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: