சென்னையில் இருந்து சிங்கப்பூர், தாய்லாந்துக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்: 3 பேர் கைது

மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து நேற்றிரவு சிங்கப்பூர், தாய்லாந்து விமானங்கள் மூலம் கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு சிங்கப்பூர் செல்லும் தனியார் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது. அதில் செல்லும் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த 2 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது எதுவும் இல்லை. தனியறைக்கு அழைத்து சென்று ஆடைகளை களைந்து சோதனை செய்தனர். இருவரின் உள்ளாடைகளிலும் கட்டுக்கட்டாக 20,400 அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்லும் தனியார் விமானம் புறப்பட தயாரானது. அதில் செல்லும் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சென்னையை சேர்ந்த ஒருவரின் உள்ளாடைக்குள் 15,000 சவூதி அரேபியாவின் ரியால் பணம் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

மொத்தம் ரூ.20 லட்சம் வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற 3 பேரிடமும் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: